எஸ்.எஸ். பழனிமாணிக்கம் மீண்டும் களம் காண்பாரா?

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக் கேட்டு எஸ்.எஸ். பழனிமாணிக்கம் உள்ளிட்டோர் முழு வீச்சில் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இத்தொகுதியை 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை தக்க வைத்த திமுக, மொத்தம் 7 முறை வெற்றி பெற்றுள்ளது. 1984 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 முறை போட்டியிட்ட எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 1996 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றார். இரு முறை மத்திய இணை அமைச்சராக இருந்தார்.
ஆனால்,  தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு வந்த டி.ஆர். பாலு 2014 ஆம் ஆண்டில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார். இதனால், சீட் பெறுவதில் டி.ஆர். பாலுவுக்கும் பழனிமாணிக்கத்துக்கும் கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில், போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெற்ற டி.ஆர். பாலு தோல்வியைத் தழுவினார். எனவே, டி.ஆர். பாலு மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவதற்காகத் தலைமையகத்தில் விருப்ப மனு கொடுத்துள்ளார்.
என்றாலும், 5 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சாவூர் தொகுதியில் திமுகவை பொருத்தவரை பழனிமாணிக்கம் அணி,  டி.ஆர். பாலு அணி என்ற நிலை உருவாகிவிட்டது. இப்போது போட்டியிடுவதற்கான வாய்ப்பைப் பெறுவதிலும் இரு அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 
இந்நிலையில், மீண்டும் போட்டியிடுவதற்கான வாய்ப்புக் கோரி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார் பழனிமாணிக்கம். இவரைப் போலவே டி.ஆர். பாலு அணியைச் சார்ந்த ஒரத்தநாடு தொகுதி முன்னாள் எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமியும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தவிர, வேறு சிலரும் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து தலைமையகத்தில் மனு கொடுத்துள்ளனர். எனவே, யாருக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பதில் தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
இரண்டாவது முறையாக 
தமாகா: அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகுதியில் ஏற்கெனவே 1999 ஆம் ஆண்டில் ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமாகா தனித்துப் போட்டியிட்டது. அப்போது, தமாகா 69,025 வாக்குகள் பெற்றது. ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாசன் தலைமையிலான தமாகா இத்தொகுதியில் போட்டியிடுகிறது. இப்போது, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா சார்பில் போட்டியிடுபவர் யார் என்பது குறித்து முடிவாகிவிட்டதாகவும், விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் தமாகா வட்டாரங்கள் தெரிவித்தன.
தஞ்சாவூர் தொகுதியில் தங்களுக்கு வலுவான அடித்தளம் இருக்கிறது என அமமுக-வினர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். என்றாலும், வேட்பாளர் தேர்வில் மிகவும் கவனமாகச் செயல்படுகின்றனர். முன்னாள் அமைச்சர் எஸ்.டி. சோமசுந்தரத்தின் மகன் எஸ்.டி.எஸ். செல்வம், பொன்னையா ராமஜெயம் கல்லூரி தலைவர் பொன். முருகேசன் உள்ளிட்டோர் வாய்ப்புக் கேட்டு முயற்சி செய்து வருகின்றனர்.

2 தேர்தலை சந்திக்கும் தஞ்சாவூர்
தஞ்சாவூரை பொருத்தவரை 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது ஒரே நேரத்தில் இரு தேர்தல் நடைபெறவுள்ளது. அதாவது மக்களவைப் பொதுத் தேர்தலுடன் தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற இருக்கிறது.
இத்தொகுதியில் 2016 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில், தேர்தல் தள்ளிப்போனது. பின்னர், 2016, நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக எம். ரெங்கசாமி வெற்றி பெற்றார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்களில் ஒருவரான ரெங்கசாமி தற்போது அமமுகவில் உள்ளார். எனவே, அமமுகவை பொருத்தவரை தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக ரெங்கசாமியே மீண்டும் களமிறக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல, அதிமுகவிலும், திமுகவிலும் முக்கிய பிரமுகர்கள் விருப்ப மனு கொடுத்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com