பேராவூரணியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
By DIN | Published On : 16th May 2019 08:35 AM | Last Updated : 16th May 2019 08:35 AM | அ+அ அ- |

பேராவூரணியில் எஸ்.எம்.என். ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மே 1ஆம் தேதி தொடங்கி 15 நாள்களாக கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஏழை மாணவ மாணவிகள் பயன் பெறும் வகையில், இலவசமாக நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாமில் தடகளம், வாலிபால், சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பயிற்சிகள், 3 வயது முதல் 18 வயது வரையிலான 85 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.
இங்கு பயிற்சி பெற்ற 15 மாணவ, மாணவிகள் அரசு விளையாட்டு விடுதிகளில் சேர தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கோடைகால பயிற்சி முகாம் நிறைவு விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சி. கஜானா தேவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. எஸ்.எம்.என். ஸ்போர்ட்ஸ் அகாடெமி நிறுவனர் கே.ஆர். குகன், பாரத் பால் நிறுவன நிர்வாக இயக்குநர் கணேசன், வர்த்தக கழகப் பொருளாளர் எஸ். ஜகுபர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடந்த 5 ஆண்டுகளாக கோடைகாலத்தில் நடத்தப்பட்டு வந்த இலவச பயிற்சியை, இனிவரும் காலங்களில் மாலை நேரங்களில் தினசரி வழங்க நிறைவு விழாவில் முடிவு செய்யப்பட்டது. விழாவில், பயிற்சியாளர்கள் பாரதிதாசன், நீலகண்டன், உடற்கல்வி ஆசிரியர்கள் சோலை , முரளி, பாஸ்கரன், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.