மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெயிண்டர் சாவு
By DIN | Published On : 18th May 2019 09:09 AM | Last Updated : 18th May 2019 09:09 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் அருகே வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் பெயிண்டர் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகேயுள்ள ஆலக்குடி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ஆனந்த் (26). பெயிண்டர். திருவையாறில் உள்ள வீட்டில் வியாழக்கிழமை வண்ணம் பூசும் பணி மேற்கொண்ட இவர் வெள்ளிக்கிழமை அதிகாலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பள்ளியக்ரஹாரம் - பிள்ளையார்பட்டி புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது கரம்பை பகுதியில் இவர் மீது அந்த வழியாக சிமென்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி மோதியது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர வயலில் கவிழ்ந்தது.
இதில், பலத்தக் காயமடைந்த ஆனந்த் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும், காயமடைந்த லாரி ஓட்டுநரான அரியலூர் மாவட்டம், கண்ணகிபுரத்தைச் சேர்ந்த ஜென்னிஸ் (23) தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து வல்லம் போலீஸார் விசாரிக்கின்றனர்.