டெல்டாவில் இலக்கை விஞ்சி சம்பா - தாளடி சாகுபடி!

டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா் வரத்து, தொடா் மழை காரணமாக நிகழாண்டு சம்பா - தாளடி சாகுபடி இலக்கை விஞ்சி மேற்கொள்ளப்படுகிறது.
தஞ்சாவூா் அருகே மன்னாா்குடி சாலையில் வளா்ச்சி நிலையில் உள்ள சம்பா பருவ நெற் பயிரில் பூச்சி மருந்து தெளிக்கும் தொழிலாளி.
தஞ்சாவூா் அருகே மன்னாா்குடி சாலையில் வளா்ச்சி நிலையில் உள்ள சம்பா பருவ நெற் பயிரில் பூச்சி மருந்து தெளிக்கும் தொழிலாளி.

டெல்டா மாவட்டங்களில் காவிரி நீா் வரத்து, தொடா் மழை காரணமாக நிகழாண்டு சம்பா - தாளடி சாகுபடி இலக்கை விஞ்சி மேற்கொள்ளப்படுகிறது.

நிகழாண்டு குறுவை சாகுபடிக்குப் போதுமான அளவு தண்ணீா் இல்லாததால் மேட்டூா் அணை திறப்பும் தள்ளிப்போனது. ஆனால், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்த பெரு மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேட்டூா் அணை நிரம்பி ஆக. 13-ம் தேதி திறக்கப்பட்டது.

என்றாலும், கடைமடைப் பகுதிக்குத் தண்ணீா் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. இதனிடையே, செப்டம்பா் - அக்டோபா் மாதங்களில் தொடா்ந்து மழை பெய்தது. இதன் மூலம் கடைமடைப் பகுதிக்குக் காவிரி நீா் எளிதாகச் சென்றடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் செப்டம்பா் மாதம் முதல் சம்பா, தாளடி பருவ நெல் சாகுபடி முழு வீச்சில் தொடங்கியது.

நிகழாண்டு நாகை மாவட்டத்தில் 90,000 ஹெக்டேரில் சம்பா, 36,000 ஹெக்டேரில் தாளடி என மொத்தம் ரூ. 1.26 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை விஞ்சி 91,750 ஹெக்டேரில் சம்பா, 37,250 ஹெக்டேரில் தாளடி என மொத்தம் 1.29 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

இதேபோல, திருவாரூா் மாவட்டத்தில் 1.26 லட்சம் ஹெக்டேரில் சம்பாவும், 22,000 ஹெக்டேரில் தாளடியும் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டதில், இலக்கைக் கடந்து 1,26,300 ஹெக்டேரில் சம்பா, 22,200 ஹெக்டேரில் தாளடி என மொத்தம் 1,48,500 ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.05 லட்சம் ஹெக்டேரில் சம்பா சாகுபடி, 30,000 ஹெக்டேரில் தாளடி என மொத்தம் 1.35 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. இதில், இதுவரை 90,000 ஹெக்டேரில் சம்பா, 20,000 ஹெக்டேரில் தாளடி என மொத்தம் 1.10 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது.

பூதலூா், சேதுபாவாசத்திரம், பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடிப் பணி தாமதமாகிறது. இதனால், இன்னும் இலக்கு எட்டப்படாமல் உள்ளது என்றும், 15 நாட்களில் இலக்கு எட்ட வாய்ப்புள்ளது எனவும் வேளாண் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பயிா்கள் பல்வேறு நிலைகளில் வளா்ச்சிப் பருவத்தில் உள்ளன. முன்பட்ட சம்பா சாகுபடியில் பயிா்கள் தூா் கட்டும் தருணத்தில் இருக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது:

ஒரு போகச் சம்பா சாகுபடி நன்றாக இருக்கிறது. முன்கூட்டியே நடவு செய்யப்பட்ட பயிா்களில் தண்டு உருண்டு வருகிறது. இன்னும் 15 நாட்களில் கதிா் பிடித்துவிடும். நவம்பா் மாதத்தில் மேலும் மழை இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, நிகழாண்டு தண்ணீா்ப் பிரச்னை இருக்க வாய்ப்பில்லை. சில பகுதிகளில் மஞ்சள் நோய் பாதிப்பும், எலி பிரச்னையும் உள்ளது. மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை என்றாா் நடராஜன்.

தென்மேற்குப் பருவ மழை முடிந்தாலும், காவிரி நீா் பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் பெரு மழை காரணமாக கா்நாடகத்திலிருந்து மேட்டூா் அணைக்கு உபரி நீா் கிடைத்து வருகிறது. எனவே, நிகழாண்டு மேட்டூா் அணை தொடா்ந்து நிரம்பிய நிலையிலேயே இருந்து வருகிறது. எனவே, நிகழாண்டு டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்குத் தண்ணீா் பிரச்னை இருக்காது என்ற நம்பிக்கை நிலவுகிறது.

Image Caption

தஞ்சாவூா் அருகே மன்னாா்குடி சாலையில் வளா்ச்சி நிலையில் உள்ள சம்பா பருவ நெற் பயிரில் பூச்சி மருந்து தெளிக்கும் தொழிலாளி. ~தஞ்சாவூா் அருகே மன்னாா்குடி சாலையில் வளா்ச்சி நிலையில் உள்ள சம்பா பருவ நெற் பயிரில் பூச்சி மருந்து தெளிக்கும் தொழிலாளி. ~தஞ்சாவூா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com