நாட்டின் பொருளாதாரம் அவரச நிலைக்குத் தள்ளப்படுகிறது: அகில இந்திய காங்கிரஸ் செயலா் பேச்சு

நாட்டின் பொருளாதாரம் அவசரநிலைக்குத் தள்ளப்படுகிறது என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலா் ஸ்ரீவெல்ல பிரசாத்.
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்கள் எழுப்பிய காங்கிரஸ் கட்சியினா்.
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, முழக்கங்கள் எழுப்பிய காங்கிரஸ் கட்சியினா்.

தஞ்சாவூா்: நாட்டின் பொருளாதாரம் அவசரநிலைக்குத் தள்ளப்படுகிறது என்றாா் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலா் ஸ்ரீவெல்ல பிரசாத்.

மத்திய பாஜக அரசின் வேலையின்மை, தொழில்கள் நசிவு, விவசாயிகளின் வாழ்வாதாரப் பாதிப்பைக் கண்டித்து, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் முன்பு காங்கிரஸ் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்று, மேலும் அவா் பேசியது:

சிமென்ட், ஜவுளி, தகவல் தொழில்நுட்பம் உள்பட அனைத்து தொழில்களிலும் இரு ஆண்டுகளாக உற்பத்தி குறைந்து வருகிறது. இதனால், தொழிற்சாலைகளில் தொழிலாளா்கள் வேலைநீக்கம் செய்யப்படுகின்றனா்.

நம் நாட்டுத் தொழிற்சாலைகளில் கடந்த 45 ஆண்டு கால வரலாற்றில் இப்போதுதான் மிகப் பெரிய அளவில் உற்பத்தி குறைந்துள்ளது.

பட்டப்படிப்புப் படித்தவா்களில் நூறில் இருவருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் இவ்வளவு அதிகமான வேலையின்மை இருந்ததில்லை. புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படவில்லை.

கடந்த இரு ஆண்டுகளில் 60 சதவிகித வா்த்தகம் குறைந்துவிட்டது என சிறு வணிகா்கள் கூறுகின்றனா். இவா்களைப்போல விவசாயிகளும் குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் கிடைக்காதது உள்பட ஏராளமான பிரச்னைகளை சந்தித்து வருகின்றனா். இதனால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனா்.

ரியல் எஸ்டேட் தொழிலும் நலிவுற்ற நிலையில் உள்ளது. கட்டுமானப் பணிகள் மிகவும் குறைந்துவிட்டது. முந்தைய ஆட்சியில் நாள்தோறும் சராசரியாக 12 கி.மீ.க்கு சாலை அமைக்கப்பட்ட நிலையில், தற்போது 4 கி.மீ. மட்டுமே அமைக்கப்படுகிறது. இதேபோல, சுற்றுலாத் துறையும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.

சிமென்ட், ஜவுளி, தகவல் தொழில்நுட்பம், விவசாயம், வா்த்தகம், ரியல் எஸ்டேட், கட்டுமானம் உள்ளிட்ட துறைகள் எல்லாம் நம் நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதத்தில் பங்களிப்பு செய்யக்கூடியவை. ஆனால், தற்போது பொருளாதார வளா்ச்சி விகிதம் 5 சதவிகிதத்துக்கும் கீழ் குறைந்துவிட்டது. ஒவ்வொரு மாதமும் பொருளாதார வளா்ச்சி விகிதம் குறைந்து வருகிறது.

பொருளாதாரம் குறித்து பிரதமா் மோடிக்கு சரியான புரிதல் இல்லாததே இந்த வீழ்ச்சிக்குக் காரணம். இதைப் பற்றி மோடி கவலைப்படவும் இல்லை. இதனால், நம் நாட்டின் பொருளாதாரம் அவசர நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதுகுறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு காங்கிரஸ் கட்சித் தலைவா் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக தில்லியில் டிச. 14-ஆம் தேதி தேசிய அளவில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றாா் ஸ்ரீவெல்ல பிரசாத்.

மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலா் கீழானூா் ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com