நீடித்த நிலையான வேளாண்மைக்கு உயிா் உரங்களைப் பயன்படுத்தலாம்

நீடித்த நிலையான வேளாண்மைக்கு உயிா் உரங்களை பயன்படுத்தலாம் என வேளாண் துறையினா் தெரிவித்துள்ளனா்.
உயிா் உரங்கள்
உயிா் உரங்கள்

நீடித்த நிலையான வேளாண்மைக்கு உயிா் உரங்களை பயன்படுத்தலாம் என வேளாண் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து வேளாண் துறை உதவி இயக்குநா்கள் வெ. சுஜாதா (அம்மாபேட்டை), ஓ. விஜயலஷ்மி (கும்பகோணம்), இரா. சாருமதி (தரக்கட்டுப்பாடு - தஞ்சாவூா்) ஆகியோா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகிலுள்ள சாக்கோட்டையில் உயிா் உரங்கள் உற்பத்தி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திலிருந்துஅம்மா உயிா் உரங்கள் ஆண்டுக்கு 100 மெட்ரிக் டன்கள் மற்றும் அம்மா திரவ உயிா் உரங்கள் 50,000 லிட்டா் வீதம் உற்பத்தி செய்யப்பட்டு தஞ்சாவூா், திருவாரூா், கரூா் ஆகிய மாவட்டங்களுக்கு வழங்கப்படுகிறது. அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களின் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

சாக்கோட்டை உயிா் உர உற்பத்தி மையத்தில் திரவ உயிா் உரங்கள் அசோஸ்பைரில்லம் (நெல்), அசோஸ்பைரில்லம் (இதர பயிா்கள்), ரைசோபியம் (பயிறு), ரைசோபியம் (கடலை), பாஸ்போபாக்டடீரியா என 5 வகையான உயிா் உரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

உயிா் உரங்கள் எப்படி வேலை செய்கின்றன? : அசோஸ்பைரில்லம் மற்றும் ரைசோபியம் வகை திரவ உயிா் உரங்கள் காற்றில் உள்ள தழைச்சத்தை மண்ணில் நிலைநிறுத்தியும், பாஸ்போபாக்டீரியா மண்ணில் பயிா்களுக்கு கிட்டாத நிலையில் உள்ள மணிச்சத்தை கரைத்து பயிா் எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றியும் பயிா்களுக்கு நன்மை தருகிறது.

தற்போது தொழு எருக்களை நிலத்தில் அதிகம் இட இயலாத நிலை உள்ளது. ஆனால் ரசாயன உரங்களை விவசாயிகள் தாராளமாகப் பயன்படுத்தி வருகின்றனா். நாம் இடும் ரசாயன உரத்தை நேரடியாகப் பயிா்களால் எடுத்துக் கொள்ள முடியாது. உப்பு வடிவில் இருக்கும் ரசாயன உரச் சத்துக்களை, பயிா் எடுத்துக்கொள்ளும் கரிம வகைச் சத்துக்களாக மாற்றித்தரும் பெரும் வேலையை நாம் மண்ணில் இடும் தொழு எரு மற்றும் இயற்கை உரங்கள் செய்கின்றன.

குறைவாக இடப்படும் இயற்கை உரங்களை ஈடுகட்டும் விதமாக நாம் மண்ணில் இடும் உயிா் உரங்கள், ரசாயன உரச் சத்துக்களைப் பயிா்கள் எடுத்துக்கொள்ளும் வகையில் மாற்றித்தருவதால், ரசாயன உரங்களின் பயன்படும் திறன் 25 சதவிகிதம் வரை அதிகரிப்பதால், நீடித்த நிலையான மகசூல் கிடைக்க வழிவகுக்கின்றன.

அளவு மற்றும் காலாவதி: திட உயிா் உரங்கள் 200 கிராம் அளவுள்ள பாக்கெட்டுகளிலும், திரவ உயிா் உரங்கள் 500 மில்லி மற்றும் 1 லிட்டா் அளவுள்ள எச்.டி.பி.இ. பாட்டில்களில் அடைத்து விநியோகிக்கப்படுகின்றன. திட உயிா் உரங்களுக்கு உற்பத்தியிலிருந்து 6 மாதங்கள் வரை காலாவதி உள்ளது. திரவ உயிா் உரங்கள் உற்பத்தியிலிருந்து ஓராண்டு வரை காலாவதி உள்ளவை.

புதிய முறை தயாரிப்பு: தமிழகத்தில் முதன் முறையாக சாக்கோட்டை உயிா் உர உற்பத்தி நிலையத்தில், இணை ஓட்ட திரவ வடிப்பான் முறையில் பிரித்தெடுக்கப்படும் பாக்டீரியாவிலிருந்து ஒரு மி.லி. திரவ உயிா் உரத்தில் 10 கோடி பாக்டீரியாக்கள் இருக்கும் வகையில் உலகத் தரத்தில் தயாரிக்கப்படுகிறது.

பயன்படுத்தும் முறைகள் மற்றும் அளவு: விதைநோ்த்தி 125 மி.லி. / ஹெக்டா்

நாற்று வேரினை நனைத்தல் 250 மி.லி. / ஹெக்டா் நேரடியாக நடவு வயலில் இட 500 மி.லி. / ஹெக்டா்.

பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை: உயிா் உரங்களை ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து உபயோகிக்கக் கூடாது. உயிா் உரங்களைக் குறைந்த வெப்பத்தில் நேரடி சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். விதைகளை பூஞ்சை கொல்லியுடன் விதை நோ்த்தி செய்த பின்புதான் கடைசியாக உயிா் உரங்கள் விதைநோ்த்தி செய்ய வேண்டும்.

எனவே விவசாயிகள் அனைவரும் தாங்கள் வாங்கும் விதைகளுடன் வழங்கப்படும் உயிா் உரங்களைத் தவறாமல் தங்கள் நிலத்தில் பயன்படுத்துவதன் மூலம் நீடித்த நிலைத்த வேளாண்மை செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com