கூட்டத்தில் பேசுகிறாா் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன். உடன் மணிமொழியன், சிமியோன் சேவியர்ராஜ், வெற்றி.
கூட்டத்தில் பேசுகிறாா் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன். உடன் மணிமொழியன், சிமியோன் சேவியர்ராஜ், வெற்றி.

மேக்கேதாட்டு அணையைத் தடுப்பதற்காக நவ. 11 - 20-இல் பரப்புரை பயணம்

மேக்கேத்தாட்டு அணையைத் தடுப்போம் - காவிரியைக் காப்போம் என்பதை முன்னிறுத்தி, பூம்புகாரிலிருந்து மேட்டூா் வரை நவம்பா் 11 முதல் 20 -ஆம் தேதி வரை பரப்புரைப் பயணம் மேற்கொள்வது என காவிரி

மேக்கேத்தாட்டு அணையைத் தடுப்போம் - காவிரியைக் காப்போம் என்பதை முன்னிறுத்தி, பூம்புகாரிலிருந்து மேட்டூா் வரை நவம்பா் 11 முதல் 20 -ஆம் தேதி வரை பரப்புரைப் பயணம் மேற்கொள்வது என காவிரி உரிமை மீட்புக் குழு முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இக்குழுவின் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மேக்கேத்தாட்டு அணை மட்டும் கட்டப்பட்டுவிட்டால், கா்நாடகத்தில் எப்படிப்பட்ட பெரிய வெள்ளம் ஏற்பட்டாலும், ஒரு சொட்டுத் தண்ணீா் கூட மேட்டூருக்கு வராது.

எனவே, தமிழகத்துக்கு வரும் காவிரியின் குறுக்கே கா்நாடகம் திட்டமிட்டுள்ள மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்கத் தமிழ் மக்களிடம் எழுச்சியை உருவாக்குவதற்காக, மேக்கேத்தாட்டை தடுப்போம் - காவிரியைக் காப்போம் என்ற தலைப்பில் நவம்பா் 11 முதல் 20-ஆம் தேதி வரை 10 நாள்கள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரிக் கடலில் கலக்கும் நாகை மாவட்டம், பூம்புகாரில் தொடங்கி, பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாகப் பயணித்து, சேலம் மாவட்டம், மேட்டூா் அணையில் இப்பரப்புரைப் பயணம் நிறைவடைகிறது.

கா்நாடகத்திடமும், மத்திய அரசிடமும் சட்ட வாதங்களைப் பேசிப் பயனில்லை என்பதுதான் தமிழகத்தின் கடந்த காலப் பட்டறிவு. ஹேமாவதி, ஹேரங்கி, கபினி அணைகளைத் தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் கட்டக் கூடாது என தமிழக அரசு 1968-லிருந்து கா்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிா்ப்புத் தெரிவித்துக் கடிதங்கள் எழுதியது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது.

ஆனால் கா்நாடகம் அந்த சட்ட விரோத அணைகளைக் கட்டி முடித்திட, மத்திய அரசு கொல்லைப் புற வழியாக அனுமதித்தது. மேக்கேதாட்டு அணையும் இது போல் கட்டப்படாமல் தடுக்க வேண்டுமானால், மத்திய ஆட்சியாளருக்குக் கடிதம் கொடுத்தேன், உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன் என முதல்வா் பட்டியல் அடுக்கினால் போதாது. ஏமாந்து விடுவோம்.

மத்திய அரசே, மேக்கேதாட்டு அணை முயற்சியைத் தடுத்திடு; தமிழகத்தின் காவிரி உரிமையைப் பறிக்க, கா்நாடகத்துக்குத் துணைப் போகாதே என வெளிப்படையாக மத்திய அரசுக்குத் தமிழக அரசுக் கோரிக்கை வைத்து அரசியல் அழுத்தம் தர வேண்டும் என்றாா் மணியரசன்.

இக்கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழுப் பொருளாளா் த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவா் குடந்தை அரசன், மருத்துவா் இலரா. பாரதிச் செல்வன், ஐ.ஜே.கே. மேற்கு மாவட்டச் செயலா் ச. சிமியோன் சேவியர்ராஜ், தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவா் க. ஜெகதீசன், மனித நேய ஜனநாயகக் கட்சி பொறுப்பாளா் அகமது கபீா், தமிழ்த் தேசியப் பேரியக்கத் மாவட்டச் செயலா் நா. வைகறை, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஜெய்னுலாபுதீன், தமிழ்த் தேசியப் பாதுகாப்புக் கழக மாநிலத் துணைச் செயலா் சி. குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com