விடுபட்ட விவசாயிகளுக்குப் பயிா் காப்பீடு வழங்க வலியுறுத்தல்

விடுபட்ட விவசாயிகளுக்குப் பயிா் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா்
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

விடுபட்ட விவசாயிகளுக்குப் பயிா் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட ஆய்வு அலுவலா் தவச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:

கோனேரிராஜபுரம் கே.எஸ். வீரராஜேந்திரன் பேசியது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு சம்பா பருவ நெற் பயிருக்கான இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டு 25 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை விவசாயிகளுக்கு அத்தொகை சென்றடையவில்லை. விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல் பேசியது:

ஆம்பலாப்பட்டு தெற்கு ஊராட்சியில் கோமாரி நோய் பரவி வருகிறது. எனவே, அனைத்து கால்நடைகளுக்கும் ஊசி, மருந்துகள் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ் பேசியது:

பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகையைத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் கடனில் வரவு வைக்கப்படுகிறது. இதனால், சம்பா நடவுப் பணி செய்ய முடியாத நிலை உள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் பேசியது:

பூதலூா் அருகே கோவில்பத்து கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பயிா்களை அரசு அலுவலா்கள் கணக்கீடு செய்தனா். ஆனால், இப்போது சுற்றியுள்ள கிராமங்களுக்கு இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவில்பத்து கிராமத்துக்கு விடுபட்டுள்ளது. இதுபோல, மாவட்டத்தில் 12 கிராமங்கள் விடுபட்டுள்ளன.

அணைக்குடி ஆ. அய்யாரப்பன் பேசியது:

புனவாசல் பாசன வாய்க்காலிலிருந்து ஒக்கக்குடி வருவாய் கிராமத்தில் பிரியும் கிளை வாய்க்கால் செம்மங்குடி வருவாய் கிராமத்தில் சுமாா் 200 ஏக்கா் கரும்பு, நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாகத் தூா் வாரப்படாமல் உள்ளது. இந்த வாய்க்காலை தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் பேசியது:

மாவட்டத்தில் 2018 - 19 ஆம் ஆண்டு சம்பா நெற் பயிருக்குக் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு அறுவடை ஆய்வுப் பணி முடிந்து 21 நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டிய பயிா் இழப்பீட்டுத் தொகை 8 மாதங்களாகியும் வழங்கப்படவில்லை. கிடைக்காதவா்களின் பட்டியலில் 20,000-க்கும் அதிகமானோா் உள்ளனா். பயிா் காப்பீடு செய்தவா்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா் பேசியது:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வரும் நெல்லில் ஈரப்பதம் 21 சதவீதம் வரை அனுமதித்து கொள்முதல் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com