தலைக்கவசம் அணியாத 22,000 பேர் மீது வழக்கு: காவல் துணைத் தலைவர் தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களில் தலைக்கவசம் அணியாத 22,000 பேர் மீது வழக்குப் பதிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 15 நாள்களில் தலைக்கவசம் அணியாத 22,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தஞ்சாவூர் சரகக் காவல் துணைத் தலைவர் ஜெ. லோகநாதன்.
தஞ்சாவூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட காவல் அலுவலகம், தமிழ்நாடு இருசக்கர வாகனப் பழுது நீக்குவோர் தலைமை நலச் சங்கம், இரு சக்கர வாகனப் பணிமனை உரிமையாளர் நலச் சங்கம் ஆகியவை சார்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணியைத் தொடங்கி வைத்த அவர் பேசியது: சாலை விபத்துகளில் 60 சதவீதம் இருசக்கர வாகனங்களால் ஏற்படுகிறது. இதில் 95 சதவீத உயிரிழப்புகள் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்வதால்தான் ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 2,500 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டத்தில் 15 நாள்களில் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்த 22,000 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்த 7,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தலைக்கவசம் அணிவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார் லோகநாதன். இந்தப் பேரணிக்குப் போக்குவரத்துத் துறைத் துணை ஆணையர் சொ. உதயகுமார் தலைமை வகித்தார். இதில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏராளமானோர் தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களில் சென்றனர். 
இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயன், இருசக்கர வாகன பழுது நீக்குவோர் சங்கத் தலைவர் அறிவழகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குண்டுமணி, நெடுஞ்செழிய பாண்டியன், காவல் ஆய்வாளர்கள் ரெங்கசாமி, சந்திரா, போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com