நெற்பயிரில் அதிக மகசூல் பெற சிங்க் சல்பேட் பயன்படுத்த அறிவுரை

நெற் பயிரில் அதிக மகசூல் பெற சிங்க் சல்பேட் பயன்படுத்தலாம் என வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் எஸ். ஐயம்பெருமாள் தெரிவித்துள்ளார்.

நெற் பயிரில் அதிக மகசூல் பெற சிங்க் சல்பேட் பயன்படுத்தலாம் என வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் எஸ். ஐயம்பெருமாள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் வட்டாரத்தில் சம்பா சாகுபடி பருவத்தில் நெல் முதன்மைப் பயிராகப் பயிரிடப்பட்டு வருகிறது. மண்ணில் தொழு உரம் போதிய அளவு இடப்படாத காரணத்தாலும், அதிக அளவில் பேரூட்டச் சத்துக்கள் இடுவதாலும், வடிகால் வசதி குறைவாக உள்ள காரணத்தாலும், துத்தநாக குறைபாடு அதிகரித்து காணப்படுகிறது. இக்குறைபாடானது அமிலத்தன்மை சுண்ணாம்பு நிறைந்த மண், அதிகப்படியான கால்சியம், மெக்னீசியம், மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த மண் வகையில் அதிகம் தென்படுகிறது. துத்தநாக சத்து பயிர் விளைச்சலில் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரு டன் நெல் உற்பத்தி செய்வதற்கு 40 கிராம் துத்தநாக சத்து தேவைப்படுகிறது. 
நெற்பயிரின் இலையின் அடிப்பாகத்தில் நடு நரம்பின் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிற கோடுகள் தோன்றும். கீழ் இலைகளில் சிவப்பு கலந்த பழுப்பு நிறம் காணப்பட்டு பயிர் வளர்ச்சி குன்றி துருப்பிடித்த தோற்றம் காணப்படும். 
மண்ணில் அடியுரமாக ஒரு ஹெக்டருக்கு 25 கிலோ துத்தநாக சல்பேட்டை 50 கிலோ மணலுடன் கலந்து உழுது சமன்படுத்தப்பட்ட வயலில் நடவுக்கு முன் மண்ணின் மேற்பரப்பில் தூவ வேண்டும். அல்லது (0.5 சதவீதம்) 5 கிராம் துத்தநாக சல்பேட் மற்றும் (1 சதவீதம்) 10 கிராம் யூரியாவை 1 லிட்டர் நீரில் கரைத்து இலை வழியாக 15 நாள் இடைவெளியில் குருத்து விடும் மற்றும் கதிர் வரும் பருவத்தில் தெளிக்க வேண்டும். அல்லது நுண்ணூட்ட கலவை (நெல்) ஏக்கருக்கு 5 கிலோ என்ற அளவில் இட வேண்டும். 
தஞ்சாவூர் வட்டாரத்தில் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்திலும் நுண்ணூட்டக் கலவை இருப்பு வைக்கபட்டுள்ளது. எனவே அனைத்து விவசாயிகளும் நுண்ணூட்ட கலவை அல்லது சிங்க் சல்பேட்டை பயன்படுத்தி துத்தநாக குறைபாட்டை தவிர்த்து உற்பத்தி மற்றும் வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com