ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தூர்வாரப்படுமா ஆத்தாகுளம் ஏரி

பேராவூரணி அருகிலுள்ள மாவடுகுறிச்சி ஊராட்சியில் ஆத்தாகுளம் ஏரியை ஆக்கிரமிப்பிலிருந்து

பேராவூரணி அருகிலுள்ள மாவடுகுறிச்சி ஊராட்சியில் ஆத்தாகுளம் ஏரியை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு, தூர்வாரித் தர வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆத்தாளூர் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலில் தொடங்கி, பட்டுக்கோட்டை சாலையிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கின் பின்புறம் முதல், மாவடுகுறிச்சி ஊராட்சியிலுள்ள தென்னங்குடி கீழக்காடு வரை சுமார் 113 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது ஆத்தாகுளம் ஏரி. ஆத்தாளூர், தென்னங்குடி கீழக்காடு பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்களுக்கு முக்கிய நீராதாரமாகவும், கால்நடைகள் தாகம் தீர்க்கவும், விவசாய மற்றும் குடிநீர் ஆழ்துளைக் கிணறுகளுக்கு நீர்மட்டம் உயரவும், பொதுமக்களின் பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஏரி இன்று ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி, வறண்டுக் காணப்படுகிறது.
ஒரு சில இடங்களில் சிலர் மண்ணை அனுமதியின்றி அள்ளி வருகின்றனர். இதனால் பல இடங்கள் பள்ளமாகக் காணப்படுகின்றன. மேலும் கொன்றைக்காடு காவிரிக் கிளை வாய்க்காலில் இருந்து தண்ணீர் வரும் துருசு, ஷட்டர் பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் உள்ளதால் தண்ணீர் வரத்தும் குறைந்து விட்டது. 
 வரத்து வாரிகள் தூர்வாராப்படாமல் புற்கள், புதர் மண்டிக் கிடப்பதாலும், கஜா புயலால் சாய்ந்த தென்னை மரங்கள் விழுந்து கிடப்பதாலும், ஆக்கிரமிப்பு காரணமாகவும், ஏரிக்கு தண்ணீர் வரும் வழி அடைபட்டு உள்ளது. இதனால் கடல்போல் தண்ணீர் தேங்கிக் கிடந்த ஆத்தாகுளம் விளையாட்டு திடல் போல மாறி விட்டது என்கிறார் சமூக ஆர்வலர் ஒருவர். 
இந்த ஏரி நிறைந்தால், தண்ணீர் வெளியேறி அருகிலுள்ள செல்வவிநாயகர்புரம் காட்டாற்றில் சென்று கலக்கும். தற்போது வரத்து வாரிகள் அடைப்பட்டிருப்பதோடு, வெளியேறும் பாதையும் இதே நிலையில்தான் உள்ளது.  இதனால் வெள்ளக்காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில்  தண்ணீர்  சூழும் அபாயம் ஏற்படலாம் .
புதிதாக நீராதாரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள்  உருவாக்கா  விட்டாலும் , இருக்கும் நீராதாரத்தையாவது காப்பாற்ற வேண்டும் என்பதே விவசாயிகள், பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com