அக்னியாறு வடிநில கோட்டத்தில்  47 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரும் பணிகள் நிறைவு

அக்னியாறு வடிநில கோட்டத்தில் ரூ. 4.28 கோடி மதிப்பீட்டில் 47.85 கி.மீ. தொலைவுக்கு முதலமைச்சரின் குடிமராமத்து மற்றும் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளதாக பொதுப் பணித் துறை


அக்னியாறு வடிநில கோட்டத்தில் ரூ. 4.28 கோடி மதிப்பீட்டில் 47.85 கி.மீ. தொலைவுக்கு முதலமைச்சரின் குடிமராமத்து மற்றும் சிறப்பு தூர்வாரும் பணிகள் நடைபெற்றுள்ளதாக பொதுப் பணித் துறை அக்னியாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் திலீபன்  தெரிவித்தார்.
பேராவூரணி வட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து மற்றும் சிறப்பு தூர்வாரும் திட்டப் பணிகளை  பொதுப் பணித் துறை அலுவலர்கள் செய்தியாளர்களுடன் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
வலையன்வயல் கிராமத்தில் கல்லணைக் கால்வாய் கோட்டத்துக்குள்பட்ட வலையன்வயல் ஏரி ரூ. 38 லட்சத்தில் புனரமைக்கப்பட்டுள்ளதை பொதுப் பணித் துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது, வலையன்வயல் ஏரியில் கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வராததால், மிகவும் சிரமத்துக்குள்ளானதாகவும், தற்போது ஏரி புனரமைக்கப்பட்டு,  தண்ணீர் முழு கொள்ளளவையும் எட்டியுள்ளதால்,  சுமார் 25 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, கெங்காதரபுரத்தில் அக்னியாறு வடிநில கோட்டத்துக்குள்பட்ட கெங்காதரபுரம் அணைக்கட்டின் முன்பகுதி தூர்வாரும் பணி மற்றும் வரத்து வாய்க்காலை புதுப்பிக்கும் பணி ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறுவதை பொதுப்பணித் துறை அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின்னர்,  அக்னியாறு வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் திலீபன் செய்தியாளர்களிடம் கூறியது: அக்னியாறு வடிநில கோட்டத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ. 2.05 கோடி மதிப்பீட்டில் 11 பணிகளும்,  சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் ரூ. 2.23 கோடி மதிப்பீட்டில் 17 பணிகளும் நடைபெற்றுள்ளன. இதன் மூலம் 47.85 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரப்பட்டு, சுமார் 631.13 ஹெக்டேர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது என்றார். 
ஆய்வின்போது, தஞ்சாவூர் மாவட்ட செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் சுருளிபிரபு, உதவி செயற்பொறியாளர்கள்( கல்லணை கால்வாய் கோட்டம்) சண்முகவேலு, அன்பரசன், உதவி பொறியாளர்கள் சசிகலா, புஷ்பராணி மற்றும் பொதுப் பணித் துறை (நீர்வள ஆதார அமைப்பு) அலுவலர்கள் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com