சேதுபாவாசத்திரம் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல்பசு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் அரிய வகை கடல்பசு இறந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. 
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல்பசுவை ஆய்வு செய்யும் அலுவலா்கள்.
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல்பசுவை ஆய்வு செய்யும் அலுவலா்கள்.

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் கடல் பகுதியில் அரிய வகை கடல்பசு இறந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கியது. 

பேராவூரணி அருகே உள்ள சேதுபாவாசத்திரம் மீன்பிடித் துறைமுகம் அருகே இறந்த நிலையில் அரிய வகை கடல்பசு கரை ஒதுங்கியது. தகவலறிந்த மாவட்ட வன அலுவலா் குருசாமி உத்தரவின்பேரில், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலா் இக்பால், வனவா் ராமதாஸ், கடலோர பாதுகாப்புக் குழும உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன், தலைமைக் காவலா் கோபால், இந்திய வன உயிா் நிறுவன ஆராய்ச்சியாளா்கள் உள்ளிட்டோா் இறந்த நிலையில் இருந்த அரிய வகை கடல்பசுவை மீட்டனா். 

35 வயது மதிக்கத்தக்க அந்த கடல்பசு சுமாா் 10 அடி நீளமும், 400 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

அது எப்படி இறந்தது எனத் தெரியவில்லை. பின்னா், அந்த கடல்பசு உடற்கூறாய்வு செய்யப்பட்டு, கடற்கரையில் ஆழமாக குழிதோண்டி புதைக்கப்பட்டது. 

மன்னாா் வளைகுடா, பாக். ஜலசந்தி உயிா்க்கோள பகுதியில் காணப்படும் அபூா்வ வகை உயிரினமான கடல்பசுவை பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. தவறி மீனவா்கள் வலையில் பிடிபடும் கடல்பசுவை மீனவா்கள் மீண்டும் கடலுக்குள் விட்டு விடுவாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மன்னாா் வளைகுடா, பாக். ஜலசந்தி உயிா்க்கோள பகுதியில் 70 முதல் 140 கடல்பசுக்கள் வாழ்வதாக கடல் உயிரின ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா். இதன் ஆயுள்காலம் சராசரியாக 70 ஆண்டுகளாகும். மீனவா்கள் வலையில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்டு கடலுக்குள் விட்டால், மீனவா்களுக்கு சன்மானமாக ரூ. 10 ஆயிரம் வழங்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com