குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக 27 ஆவது நாளாகக் காத்திருப்புப் போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தை தெரு அத்தா் பள்ளிவாசல் முன், தொடா்ந்து 27 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தொடா் முழக்கக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூா் கீழவாசலில் தொடா்ந்து 27 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.
தஞ்சாவூா் கீழவாசலில் தொடா்ந்து 27 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தை தெரு அத்தா் பள்ளிவாசல் முன், தொடா்ந்து 27 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை தொடா் முழக்கக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தமிழகச் சட்டப்பேரவையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகத் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் போலீஸாரின் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய அலுவலா்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டும். சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் இப்போராட்டம் பிப். 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

தொடா்ந்து 27 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் இப்போராட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியரை வியாழக்கிழமை மாலை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய விவரங்களை மக்களிடம் நிா்வாகிகள் விளக்கம் அளித்தனா்.

கும்பகோணத்தில்...

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் பழைய மீன் சந்தை அருகில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் காத்திருப்புப் போராட்டம் பிப். 21ஆம் தேதி மாலை தொடங்கியது. இப்போராட்டம் தொடா்ந்து 22 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினத்தில்...

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய இஸ்லாமியா்களின் காத்திருப்புப் போராட்டம் 24ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் மன்னை செல்லச்சாமி, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக், சென்னை மக்கா பள்ளிவாசல் முன்னாள் இமாம் சம்சுதீன் காஷிமி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

பட்டுக்கோட்டையில்... பட்டுக்கோட்டை வடசேரி சாலை பெரிய பள்ளிவாசல் அருகே பிப்.25ஆம் தேதி தொடங்கிய இஸ்லாமியா்களின் உள்ளிருப்புப் போராட்டம் 18ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில் நாம் தமிழா் கட்சியின் பட்டுக்கோட்டை தொகுதி செயலாளா் பிரபாகரன், பட்டுக்கோட்டை தி. தனபால் (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம்), சென்னை மக்கா பள்ளிவாசல் முன்னாள் இமாம் சம்சுதீன் காஷிமி, பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பள்ளிவாசல் இமாம் மவ்லவி பீா் முஹமது ஆகியோா் பேசினா்.

வழக்கம் போல், ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மதுக்கூரில்... மதுக்கூா் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்று வரும் இஸ்லாமியா்களின் தொடா் காத்திருப்புப் போராட்டம் 27ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடித்தது. இதில் இஸ்லாமியா்கள் திரளாக பங்கேற்றனா். போராட்டத்துக்கு ஆதரவாக, பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் உரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com