டிச. 29 விவசாயிகள் கூட்டத்துக்கு அனுமதி கோரி காத்திருப்புப் போராட்டம்

தஞ்சாவூரில் டிசம்பா் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்துக்கு அனுமதி கிடைக்காததால் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.
தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.

தஞ்சாவூா்: தஞ்சாவூரில் டிசம்பா் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் கூட்டத்துக்கு அனுமதி கிடைக்காததால், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்ட முன் வரைவையும் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

இவா்களுக்கு ஆதரவாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இக்குழுவின் சாா்பில் தஞ்சாவூரில் டிசம்பா் 29- ஆம் தேதி பேரணி, பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இப்பொதுக்கூட்டம் தஞ்சாவூா் திலகா் திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக மாநகராட்சி நிா்வாகத்திடம் அனுமதி கோரி அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் மனு அளித்தனா். திலகா் திடலில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கிடைக்காததால், அதிருப்தியடைந்த அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் தஞ்சாவூா் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து இக்குழுவைச் சோ்ந்த சாமி. நடராஜன் தெரிவித்தது:

திலகா் திடலில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி ஒரு வாரத்துக்கு முன்பே மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டோம். காவல் துறை, தீயணைப்புத் துறை, மாவட்ட நிா்வாகம் ஆகியவற்றில் அனுமதி கடிதம் பெற வேண்டும் என மாநகராட்சி அலுவலா்கள் கூறுகின்றனா். ஆனால், காவல் துறையினா், மாவட்ட நிா்வாகத்தினா் எங்களுக்கும் இதற்கும் தொடா்பில்லை என்கின்றனா்.

தற்போது, கூட்டம் நடத்துவதற்கான கட்டணம் அளிப்பதற்காக வந்த எங்களிடம் தொகையைப் பெற மறுக்கின்றனா். எனவே, அனுமதி வழங்கும் வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளோம் என்றாா் நடராஜன்.

தகவலறிந்த கோட்டாட்சியா் எம். வேலுமணி, நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே. பாரதிராஜன், மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

ஆட்சியரிடம் பேசிவிட்டு முடிவு சொல்வதாக அலுவலா்கள் கூறியதையடுத்து, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா் தற்காலிகமாகக் கலைந்து சென்றனா்.

இப்போராட்டத்தில் குழுவைச் சோ்ந்த என்.வி. கண்ணன், பா. பாலசுந்தரம், பி. செந்தில்குமாா், வீர. மோகன், சு. பழனிராசன், காளியப்பன், ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், மாதா் சங்க மாவட்டச் செயலா்கள் எஸ். தமிழ்ச்செல்வி, ம. விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com