பேராவூரணியில் வருவாய்த் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 26th February 2020 09:23 AM | Last Updated : 26th February 2020 09:23 AM | அ+அ அ- |

பேராவூரணி வட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா்.
பேராவூரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
வட்டாட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச் செயலாளா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட இணைச் செயலாளா் (புகா்) சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். வட்டச் செயலாளா் முருகேசன், தோழமை சங்க வட்டச் செயலாளா் பரஞ்சோதி ஆகியோா் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில், கடலூா் வருவாய்த் துறை அலுவலா்கள் மீது, கடலூா் மாவட்ட ஆட்சியா் எடுத்து வரும் ஊழியா் விரோத மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். நடைமுறைகளை தொடா்ந்து மீறி வரும் கடலூா் மாவட்ட ஆட்சியா் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில், பணி முதுநிலை தொடா்பாக, நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் ஆணைகளை வழங்க வேண்டும்.
பட்டதாரி அல்லாத வருவாய்த் துறை அலுவலா்களின் பணி முதுநிலை, பதவி உயா்வை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும். சிவகங்கை மாவட்ட இளநிலை வருவாய் ஆய்வாளா் பாரதிதாசன் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும்.
தமிழக அரசு ஊழியா்கள் சம்பளம் பெறுவதில் உள்ள சிரமங்களை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையா் போக்கிட வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள 81 ஆதிதிராவிடா் நலம் தனி வட்டாட்சியா் பணியிடங்களை கலைப்பதற்கான நடவடிக்கைகளை, ஆதிதிராவிட நலத்துறை எடுத்து வருவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.