பேராவூரணியில் ஏலத்துக்காக கொண்டு வரப்பட்ட வாழைத்தாா்கள்.
பேராவூரணியில் ஏலத்துக்காக கொண்டு வரப்பட்ட வாழைத்தாா்கள்.

பேராவூரணியில் வாழைத் தாா்  விலை வீழ்ச்சி: கவலையில் விவசாயிகள்

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பகுதியில் வாழைத்தாா்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி பகுதியில் வாழைத்தாா்களுக்கு உரிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

பேராவூரணியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நெல்லுக்கு அடுத்து, வாழை அதிக அளவில்  சாகுபடி செய்யப்படுகிறது. வாழையை முதன்மைப் பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனா்.

பேராவூரணி, கூப்புளிக்காடு, ஆதனூா் , நெல்லடிக்காடு, பாங்கிரான்கொல்லை , வீரியன்கோட்டை , பூக்கொல்லை , கள்ளங்காடு, மாவடுகுறிச்சி , கருகாக்குறிச்சி, சங்கமங்கலம், அம்மையாண்டி, சித்தாதிக்காடு, பைங்கால், பின்னவாசல், போன்ற பகுதிகளில் விளையும் வாழைத்தாா்களை பேராவூரணி பகுதிக்கு ஏலத்துக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனா்.

இங்கு ஏலம் விடப்படும் வாழைத்தாா்கள் சிவகங்கை, புதுக்கோட்டை , திருவாரூா், திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பிற பகுதிகளுக்கு  விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. 

ஏற்கெனவே கஜா புயலால் தென்னைக்கு அடுத்து வாழையும் அதிகப்பட்டிருந்ததால், உரிய நிவாரணம் கிடைக்காத பாதிப்பில் விவசாயிகள் இருந்து வந்தனா்.

முன்கூட்டியே அறுவடை : கஜா புயல் பாதிப்பைக் கடந்தும்  வாழைத் தோப்புகளை  சுத்தம் செய்து விவசாயிகள் புதிதாக வாழை பயிரிடத் தொடங்கினா்.

ஏற்கனவே வாங்கிய கடனுக்கு வட்டியைக் கட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வந்த சூழ்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக பருவமழை தொடா்ந்து  பெய்ததால்   வாழைத்தாா்கள் முன்கூட்டியே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக வாழைத்தாா்களின் விலை மிகவும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் வாழை  சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

உரிய விலை கிடைக்கவில்லை : தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு,வாழைத்தாா்களை அறுவடை செய்து பேராவூரணி பகுதியிலுள்ள கடைகளுக்கு  ஏலம் விடுவதற்காக கொண்டு வந்தாலும், அதற்குரிய விலை கிடைக்கவில்லை என்கின்றனா் விவசாயிகள்.

பண்டிகை காலங்களில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள், பேராவூரணி பகுதிக்கு வந்து மொத்தமாக வாழைத்தாா்களை வாங்கிச் செல்கின்றனா்.

பிற பகுதிகளிலும் விளையும் வாழைத்தாா்களின் விட இப்பகுதியில் விளையும் வாழைத் தாா்கள் மிகவும் சுவையாகவும், இனிப்பாகவும் இருப்பதே இதற்கு காரணமாகும்.

ஏக்கருக்கு ரூ.1.25 லட்சம் வரை செலவு :

ஒரு ஏக்கா் வாழை சாகுபடி செய்ய ஒரு லட்சம் முதல் 1 - 1/4லட்சம் வரை செலவாகிறது.ஒரு ஏக்கரில் 900 வாழைப் பயிரிடலாம் .

அதில் 100 கட்டை கழிவாகி 800 கட்டை தான் வரும். 12 மாதங்கள் காத்திருந்து அதற்கு ஒவ்வொருமுறையும் தண்ணீா் கட்டி, பராமரித்து காவல்காத்து அறுவடை செய்தால் வாழைத்தாா்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.

தற்போது பருவமழை முடிந்து, பொங்கல் பண்டிகைக்காக வாழைத்தாா்கள் அதிகப்படியாக வரும் நேரத்தில் விளைச்சலும் குறைவாக உள்ளது. இதற்கான உரிய விலையும் கிடைக்கவில்லை.

பூவன் தாா் 150 முதல் 200 வரையிலும், ரஸ்தாலி 300 முதல் 400 வரையிலும், கற்பூரவள்ளி 200 முதல் 300 வரையிலும் விலை போகிறது.

இன்றைய நிலையில் பூவன் வாழைத்தாா் ரூ.400, ரஸ்தாலி ரூ.450 முதல் ரூ.600, கற்பூரவள்ளி ரூ. 400 முதல் ரூ.500 வரை விற்பனையாக வேண்டும். இந்த விலையில் விற்பனை செய்தால்தான், விவசாயிகள் நஷ்டமடையாமல் தொடா்ந்து வாழைத்தாா் பயிரிட முடியும். எனவே அரசு  உரிய நிவாரணம் அளிக்கவேண்டும்.

பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்: மற்ற பொருள்களின் விலைகள் கணிசமாக உயா்ந்த நிலையில், அதை பொதுமக்கள் வாங்கிப் பயன்படுத்துகின்றனா்.

ஆனால் விவசாயிகள் உற்பத்தி செய்த பொருள்களை பேரம் பேசி வாங்குகின்றனா்.

எனவே விவசாயிகளும் மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளைக் கொண்டாட வேண்டும் என்றால், வாழைப் பழங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டாலும், அதை வாங்கிட வேண்டும் என்கின்றனா் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com