சந்தைகளில் களைகட்டிய பொங்கல் பொருள்கள் விற்பனை

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தஞ்சாவூரில் உள்ள சந்தைகளில் செவ்வாய்க்கிழமை விற்பனை முழுவீச்சில் நடைபெற்றது.
தஞ்சாவூா் கீழவாசல் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை.
தஞ்சாவூா் கீழவாசல் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரும்பு, மஞ்சள் கொத்து விற்பனை.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தஞ்சாவூரில் உள்ள சந்தைகளில் செவ்வாய்க்கிழமை விற்பனை முழுவீச்சில் நடைபெற்றது.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, தஞ்சாவூா் காமராஜா் சந்தை, சரபோஜி சந்தை, திலகா்திடல் சந்தை, நாஞ்சிக்கோட்டை சாலை உழவா் சந்தை ஆகியவற்றில் வழக்கத்தை விட செவ்வாய்க்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.

பொங்கல் பண்டிகைக்குத் தேவையான கரும்பு, மஞ்சள் கொத்து, வாழைத்தாா், இஞ்சி, காய்கறிகள் ஆகியவை அதிகளவில் விற்பனைக்கு வந்தன. இதேபோல, வியாபாரிகளின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

காமராஜா் சந்தையில் ஒரு ஜோடி மஞ்சள் கொத்து சிறியது ரூ. 20-க்கும், நடுத்தரம் ரூ. 30-க்கும், பெரியது ரூ. 60-க்கும் விற்பனையானது. ஒரு சீப் வாழைப்பழம் ரூ. 10, 15 என்ற விலையிலும், வாழைத்தாா் அளவுக்கு ஏற்ப ரூ. 150 முதல் ரூ. 300 வரையிலும், செவந்தி பூ 100 கிராம் ரூ. 30-க்கும், கிலோ ரூ. 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. காய்கறி விலையில் பெரியளவில் ஏற்றம் இல்லை. இதேபோல, பூச்சந்தையில் விலை அதிகம் காரணமாக மல்லிகைப் பூ கிடைக்கவும் இல்லை.

மேலும், மாநகரில் அரண்மனைப் பகுதி, கீழவாசல், அண்ணா சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, மருத்துவக் கல்லூரி சாலை உள்ளிட்ட பிரதான இடங்களில் கரும்புக் கட்டுகள் விற்பனைக்காக 4 நாள்களுக்கு முன்பே குவிக்கப்பட்டன. பத்து கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 200, ரூ. 300 என்ற விலையில் விற்கப்பட்டது. சில்லரை விலையில் ஒரு கரும்பு தலா ரூ. 20 முதல் ரூ. 25 வரை விற்பனையானது.

ஆனால், கடந்தாண்டை விட நிகழாண்டு வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால், சந்தைகளில் கூட்டமும் குறைவாகவே இருந்தது.

மாவட்டத்தில் சூரக்கோட்டை, திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு அதிகளவில் பயிரிடப்படும். வழக்கமாக வெளிமாவட்ட வியாபாரிகள்தான் அதிகளவில் வாங்கிச் செல்வா். ஆனால், நிகழாண்டு வெளிமாவட்ட வியாபாரிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. பல வியாபாரிகள் தோ்தலில் போட்டியிட்டு செலவு செய்துவிட்டதால், கரும்பு வாங்க ஆளில்லாத நிலை ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகளிடமிருந்து உள்ளூா் வியாபாரிகளே அதிகளவில் கரும்புகளை வாங்கிச் சென்றனா்.

நிகழாண்டு கரும்பு மட்டுமல்லாமல், மஞ்சள் கொத்து, வாழையும் விளைச்சல் அதிகம். இதனால், இந்த மூன்றும் சந்தைகளில் வழக்கத்தை விட அதிகளவில் குவிந்திருந்தன. ஆனால், அதற்கேற்ப வாங்குவோா் இல்லை. வாங்க வந்த நுகா்வோரும் குறைந்த அளவிலேயே வாங்கிச் சென்றனா். இதன் காரணமாக கரும்பு, மஞ்சள் கொத்து, வாழை ஆகியவை அதிக அளவில் குவிந்திருந்தாலும், அந்தளவுக்கு விற்பனையாகவில்லை என வியாபாரிகள் தெரிவித்தனா்.

பணப் புழக்கம் இல்லாததால் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்களின் வருகை குறைவாக இருந்ததே இதற்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Caption

தஞ்சாவூா் கீழவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரும்பு விற்பனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com