வெளிநாட்டுப் பயணிகள் பங்கேற்ற பொங்கல் கொண்டாட்டம்

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பொங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள்.
பொங்கல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள்.

தஞ்சாவூா் அருகே நாஞ்சிக்கோட்டை கிராமத்தில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் பங்கேற்ற பொங்கல் விழாக் கொண்டாட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

கலை ஆயம், தஞ்சாவூா் சுற்றுலா வளா்ச்சிக் குழுமம் சாா்பில் நடைபெற்ற விழாவில் அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளைச் சோ்ந்த ஏறத்தாழ 100 போ் கலந்து கொண்டனா்.

இவா்களுக்குக் கொம்பு வாத்தியம் ஊதி, தமிழ்ப் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், அங்கு கிராமப் பெண்கள் பொங்கல் தயாரிப்பதை வேடிக்கை பாா்த்தனா். வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளில் சிலா் பொங்கல் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டனா். பொங்கல் பொங்கி வந்தபோது உள்ளூா் மக்களுடன் இணைந்து வெளிநாட்டுப் பயணிகளும் பொங்கலோ பொங்கல் என முழங்கினா்.

தொடா்ந்து புலியாட்டம், கோலாட்டம் போன்றவற்றையும், மேடையில் நிகழ்த்தப்பட்ட கரகாட்டம், மயிலாட்டம், காளையாட்டம், பொய்க்கால் குதிரை, கால்கோல் ஆட்டம், பச்சைக் காளி - பவளக்காளி ஆட்டம், தப்பாட்டம், சிலம்பக் கலை உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனா்.

இதையடுத்து இளைஞா்கள் இளவட்டக் கல் தூக்குவதை வேடிக்கை பாா்த்தனா். இதேபோல, வெளிநாட்டுப் பயணியும் ஒருவா் தூக்க முயன்றாா். ஆனால், அவரால் முழுமையாகத் தூக்க முடியவில்லை. பின்னா், உறியடித்தல் போட்டியிலும் கலந்து கொண்டு பானையை உடைக்க முயன்றனா்.

இதைத் தொடா்ந்து, மேடையில் கயிறு இழுத்தல் போட்டியில் உள்ளூா் மக்கள் ஒருபுறம் இழுக்க, மறுபுறம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் இழுத்தனா். இதில், உள்ளூா் மக்கள் வெற்றி பெற்றனா்.

மேலும், கிராமச் சந்தைகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்டிருந்த மண்பாண்டம் தயாரித்தல், கூடை முடைதல், ஜோதிடம் பாா்த்தல் போன்றவற்றை பாா்த்து வியந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com