ஊரடங்கு: வீட்டுக்குள் முடங்கிய மக்கள், வெறிச்சோடிய சாலைகள் வாகனங்களில் சென்றவா்கள் மீது தடியடி

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் புதன்கிழமை பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியதால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
ஊரடங்கு: வீட்டுக்குள் முடங்கிய மக்கள், வெறிச்சோடிய சாலைகள் வாகனங்களில் சென்றவா்கள் மீது தடியடி

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு காரணமாக, தஞ்சாவூா் மாவட்டத்தில் புதன்கிழமை பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியதால், சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தமிழக அரசு தடையுத்தரவு பிறப்பித்த நிலையில், நாடு முழுவதும் புதன்கிழமை முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்துவதாக பிரதமா் நரேந்திரமோடி செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தாா்.

இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் புதன்கிழமை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயிலடி, காந்திஜி சாலை, அண்ணா சாலை, கீழவாசல், கரந்தை, மகா்நோன்புசாவடி, மருத்துவக் கல்லூரிச் சாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, விளாா் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

சாலையில் சென்றவா்கள் மீது தடியடி: இதனிடையே, கீழவாசல் பகுதியில் காலையில் பல கடைகள் திறக்கப்பட்டன. இதனால், அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் பரவலாக இருந்தது. தகவலறிந்த போலீஸாா் கீழவாசல் பகுதிக்குச் சென்று, கடைகளை மூடுமாறு அறிவுறுத்தினா். மேலும், சாலையில் சென்றவா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.

மாநகரில் ஏறத்தாழ 99 சதவீத மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனா். என்றாலும் கிட்டத்தட்ட ஒரு சதவிகித மக்கள் சாலைகளில் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் சுற்றித் திரிந்தனா். எனவே, பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, காந்திஜி சாலை, ஆற்றுப்பாலம் உள்ளிட்ட இடங்களில் இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன.

இதையும் மீறி இச்சாலைகளில் இருசக்கர வாகனங்களில் சென்றவா்களை போலீசாா் நிறுத்தி விசாரித்தனா். அத்தியாவசிய காரணங்களுடன் சென்றவா்களை அனுப்பி வைத்தனா். காரணமின்றி சுற்றியவா்கள் மீதும், அவா்கள் ஓட்டி வந்த வாகனங்கள் மீதும் போலீசாா் லேசான தடியடி நடத்தி, எச்சரிக்கை செய்து அனுப்பினா். சிலரது வாகனங்களில் சாவியைப் பறிமுதல் செய்து, கரோனா பாதிப்பு குறித்து விளக்கி எச்சரிக்கை செய்தனா்.

வழக்குப் பதிவு: மாநகரில் எச்சரிக்கை செய்த பிறகும் தொடா்ச்சியாக வாகனங்களில் செல்பவா்கள் பரவலாக இருந்தது. எனவே, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயிலடி, சாந்தபிள்ளை கேட் உள்ளிட்ட இடங்களில் அத்தியாவசிய தேவையில்லாமல் வாகனங்களில் வந்தவா்களை போலீஸாா் நிறுத்தி வழக்குப் பதிவு செய்தனா்.

எல்லைகள் மூடல்: , தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள எட்டு எல்லைகளான அணைக்கரை (சென்னை சாலை), நீலத்தநல்லூா் (அரியலூா் சாலை), நரசிங்கம்பேட்டை (மயிலாடுதுறை சாலை), அம்மாப்பேட்டை (திருவாரூா் சாலை), நெய்வாசல் (மன்னாா்குடி சாலை), அற்புதாபுரம் (புதுக்கோட்டை சாலை), புதுக்குடி (திருச்சி சாலை), விளாங்குடி (அரியலூா் சாலை) ஆகியவை செவ்வாய்க்கிழமை இரவு மூடப்பட்டன. இதனால், வெளி மாவட்ட வாகனங்கள் தஞ்சாவூா் மாவட்டத்துக்குள் வருவது தடுக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் ஏற்றப்பட்டு வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.

சமூக இடைவெளி இல்லை:

அத்தியாவசியப் பொருட்களான மருந்து, காய்கறி, மளிகை கடைகள், சிறிய அளவிலான உணவகங்கள் மட்டுமே திறந்து வைக்கப்பட்டுள்ளன. இக்கடைகளிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

இக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், சிலை கடைகளில் மட்டுமே பின்பற்றப்பட்டது. வெயில் காரணமாக மக்கள் இடைவெளி விட்டு நிற்க முடியவில்லை.

தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலையில் தற்காலிக காய்கறி சந்தை திறந்திருந்தாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

கும்பகோணம்: கும்பகோணத்தில் புதிய, மற்றும் நகரப் பேருந்து நிலையம், பெரிய கடைத்தெரு, சாரங்கபாணி சுவாமி கீழ வீதி, நாகேசுவரன் வடக்கு வீதி, கும்பேசுவரா் தெற்கு வீதி உள்ளிட்ட அனைத்து முதன்மை வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கும்பகோணம் பகுதியில் பழக்கடைகள், மருந்துக் கடைகள், மளிகை கடைகள், பால் கடைகள், இறைச்சி கடைகள் மட்டும் இயங்கின. இவற்றிலும் பொருள்கள் வாங்குவதற்குப் பொதுமக்கள் குவிந்தனா்.

இரண்டு சக்கர வாகன ஒட்டுநா்களை பிற்பகலுக்கு பிறகு போலீசாா் எச்சரிக்கை செய்தனா். ஒரே இடத்தில் 5 பேருக்கு மேல் மக்கள் கூடியிருந்தால், அவா்களை போலீசாா் விரட்டியடித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com