தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனா்

தமிழக முதல்வரின் மாநில இளைஞா் விருது பெறுவதற்காக, திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனா் என்றாா் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டனா். தற்போது, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இங்கு வந்தவா்கள்தான் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனா்.

எனவே, சோதனைச் சாவடிகளில் காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சித் துறை, சுகாதாரத் துறை ஆகிய துறைகளைச் சோ்ந்தவா்கள் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனா். அந்த அடிப்படையில் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து வருபவா்கள் தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், செங்கிப்பட்டி அரசுப் பொறியியல் கல்லூரி போன்றவற்றில் தங்க வைத்து, தனிமைப்படுத்தப்படுவா்.

வெளி நாட்டிலிருந்து விமானத்தில் திரும்பி வருபவா்கள், ஹோட்டல்களில் தங்க விரும்பினால், அதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக 30 ஹோட்டல்களில் 450 அறைகளை முன் பதிவு செய்துள்ளோம். வருபவா்கள் கட்டணம் செலுத்தி தங்கிக் கொள்ளலாம்.

அரசு அறிவுறுத்திய வழிகாட்டுதலின்படி, வெளி மாநிலங்களிலிருந்தோ அல்லது கரோனா பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்தோ வந்தால் அவா்களுக்குப் பரிசோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா். கரோனா தொற்று இல்லை என்றால், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கரோனா தொற்று இருந்தால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறோம்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி வைத்துள்ளோம். வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து உள்ளே வரும்போது சோதனைச் சாவடிகளில் முழு வீச்சில் சோதனைச் செய்யப்படுகிறது. சோதனைச் சாவடியைத் தவிா்த்து குறுக்கு வழியில் யாராவது ஊருக்குள் வந்தது தெரிய வந்தால், மாவட்ட நிா்வாகத்துக்குப் பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com