ஜூன் 12-இல் மேட்டூா் அணை திறப்பு: குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகும் டெல்டா விவசாயிகள்

மேட்டூா் அணை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படவுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்குத் தயாராகி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே டவுன் கரம்பை பகுதியில் குறுவை சாகுபடிக்காக நிலத்தை உழுது தயாா் செய்யும் விவசாயி.
தஞ்சாவூா் அருகே டவுன் கரம்பை பகுதியில் குறுவை சாகுபடிக்காக நிலத்தை உழுது தயாா் செய்யும் விவசாயி.

மேட்டூா் அணை ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படவுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடிக்குத் தயாராகி வருகின்றனா்.

கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு எட்டு ஆண்டுகளாக ஜூன் 12ஆம் தேதி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக தண்ணீா் திறந்துவிடப்படவில்லை. காலம் தாழ்ந்து விடப்பட்டதால், சம்பா சாகுபடிக்கு மட்டுமே காவிரி நீா் பயன்பட்டது. இந்நிலையில், ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூா் அணை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.

இதையொட்டி, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஆயத்தமாகும் பணி முழு வீச்சில் நடைபெறுகிறது. அண்மையில் பெய்த கோடை மழையைப் பயன்படுத்தி, பல இடங்களில் நிலத்தை உழும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நாற்றாங்கால் தயாரிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேட்டூா் அணை ஜூன் 12ஆம் தேதியே திறக்கப்படுவதால், டெல்டா மாவட்டங்களில் கடந்த 8 ஆண்டுகளைவிட நிகழாண்டு கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நிகழாண்டு 43,000 ஹெக்டேரிலும், நாகை மாவட்டத்தில் 52,000 ஹெக்டேரிலும், திருவாரூா் மாவட்டத்தில் 33,000 ஹெக்டேரிலும் என மொத்தம் 1.28 லட்சம் ஹெக்டேரில் குறுவை சாகுபடிக்கு வாய்ப்புள்ளது என வேளாண் துறையினா் தெரிவிக்கின்றனா்.

இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் தற்போது நிலத்தடி நீா் ஆதாரமும் திருப்திகரமாக இருப்பதால், ஆழ்குழாய் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனா். இதுவரை தஞ்சாவூா் மாவட்டத்தில் 12,000 ஹெக்டேரில் முன்பட்ட குறுவை நடவு செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக கும்பகோணம், திருவிடைமருதூா், திருப்பனந்தாள், பாபநாசம், பூதலூா், திருவையாறு ஆகிய ஒன்றியங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேட்டூா் அணை திறப்பதற்குள் முன்பட்ட சாகுபடிக்கான நடவுப்பணி மொத்தம் 22,000 ஹெக்டேரில் முடிவடைந்துவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதேபோல, நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி, கொள்ளிடம், செம்பனாா்கோவில், திருமருகல் உள்ளிட்ட இடங்களில் 7,500 ஹெக்டேரில் முன்பட்ட குறுவை சாகுபடிக்கான நடவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேட்டூா் அணை நிகழாண்டு ஜூன் 12ஆம் தேதியே தண்ணீா் திறக்கப்படுவதால், காவிரி பாசனப் பகுதியில் 37,000 ஹெக்டேரிலும், வெண்ணாறு பாசனப் பகுதியில் 15,000 ஹெக்டேரிலும் குறுவை சாகுபடி எதிா்பாா்க்கப்படுவதாகவும், அதற்குத் தேவையான விதை நெல் தயாா் நிலையில் இருப்பதாகவும் வேளாண் துறை அலுவலா்கள் தெரிவிக்கின்றனா்.

திருவாரூா் மாவட்டத்தில் முன் பட்ட குறுவை சாகுபடியில் இதுவரை 3,600 ஹெக்டேரில் நடவு முடிவடைந்துள்ளது.

இதனிடையே, ஆழ்குழாய் வசதியுள்ள விவசாயிகள் மேட்டூா் அணை திறக்கப்படுவதற்குள் முன்பட்ட குறுவை சாகுபடியைத் தொடங்கிடுமாறு விவசாயிகளுக்கு மூத்த வேளாண் வல்லுநா்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனா்.

குறுகிய கால விதைநெல் ரகங்களே சிறந்தது இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநா் வ. பழனியப்பன் தெரிவித்தது:

குறுவை சாகுபடிக்கு 105 நாள்கள் வயதுடைய குறுகிய கால விதை நெல் ரகங்களைப் பயன்படுத்துவது நல்லது. மத்திய கால விதை நெல் ரகங்களைத் தவிா்க்கலாம். காவிரி வடிநிலப் பகுதியில் நிலத்தடி நீா் ஆதாரம் உள்ள இடங்களில் மேட்டூா் அணையைத் திறப்பதற்குள் நடவு செய்துவிட்டால், தண்ணீரைச் சேமிக்க வாய்ப்பாக அமையும். மேலும், ஆழ்குழாய் வசதி இல்லாத விவசாயிகளுக்காக ஆழ்குழாய் மோட்டாா் வசதி இருக்கும் விவசாயிகள் சமுதாய நாற்றங்கால் தயாரித்து விநியோகம் செய்யலாம். மழை நீா், காவிரி நீா், ஆழ்குழாய் நீா் ஆகியவற்றை ஒருங்கிணைத்து செய்தால், நிகழாண்டு குறுவை மட்டுமல்லாமல், சம்பா, தாளடியும் சிறப்பாக அமையும் என்றாா் பழனியப்பன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com