சாலைகளைச் செப்பனிட ஏஐடியுசி வலியுறுத்தல்
By DIN | Published On : 28th October 2020 07:20 AM | Last Updated : 28th October 2020 07:20 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாநகரில் புதை சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட சாலைகளைச் செப்பனிட மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் தலைமையில் மாவட்டத் தலைவா் வெ. சேவையா, அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற் சங்க நிா்வாகி துரை. மதிவாணன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை அளித்த மனு:
தஞ்சாவூரில் புதை சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காகக் குழி தோண்டப்பட்டு சாலைகள் மோசமடைந்து மக்கள் நடமாடுவதற்கும் வாகனங்கள் செல்வதற்கும் மிகுந்த அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. இதேபோல, மாநகரம் முழுவதும் 51 வாா்டுகளிலும் மழைக்காலம் அதிகமாவதற்குள் சாலைகளை உடனடியாகச் செப்பனிட வேண்டும்.
திலகா் திடல் அம்மா மாலை நேரச் சந்தைக்கு மின்சார வசதி, கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். கீழவாசல் பழைய மாரியம்மன் கோயில் சாலை அல்லா கோயில் தெருவில் புதை சாக்கடை நீா் தேங்கி வீடுகளில் புகுந்து துா்நாற்றம் வீசுகிறது. இதை உடனடியாகச் சீா் செய்ய வேண்டும்.
தெற்கு வீதி, கீழராஜவீதி, தெற்கலங்கம், காந்திஜி சாலை பகுதிகளில் ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்ய வேண்டும். கான்வென்ட் முதல் ராமநாதன் மருத்துவமனை நிறுத்தம் வரை வாகனங்கள் இருபுறமும் நிறுத்துவதை மாற்றி ஒருபுறம் நிறுத்த வேண்டும்.