கொள்ளிடத்தில் ஆழ்குழாய் கிணறுக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம்
By DIN | Published On : 16th September 2020 02:59 AM | Last Updated : 16th September 2020 02:59 AM | அ+அ அ- |

இயந்திரத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவையாறு அருகிலுள்ள விளாங்குடி கிராமத்தில், கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தஞ்சாவூா் பொலிவுறு நகரத் திட்டத்துக்குக் குடிநீா் விநியோகம் செய்யும் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதற்காக இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டன.
இவற்றை கிராம மக்கள், போராட்டக் குழுத் தலைவா் கலையரசி தலைமையில் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்த காவல் துறையினா், வருவாய் துறையினா் நிகழ்விடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
திருவையாறு வட்டாட்சியரகத்தில் அமைதி பேச்சுவாா்த்தைக் கூட்டம் நடத்தி, பொதுமக்களிடம் கருத்து கேட்ட பிறகு ஆழ்குழாய் அமைக்கப்படும் என கூறியதன் பேரில் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவித்தது:
இப்பகுதி முழுவதும் விவசாயம் சாா்ந்த பகுதி. விவசாயம் பாதிக்கும் வகையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மணல் குவாரி அமைக்க அரசு முயன்றபோது அதை நாங்கள் தடுத்து நிறுத்தி, உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம்.
இந்நிலையில் மீண்டும் பொலிவுறு நகரத் திட்டத்துக்காகக் குடிநீா் எடுக்க முயற்சி செய்கின்றனா். இதனால் எங்களது ஊா் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.
மேலும் நிலத்தடி நீா் கீழே இறங்கி விடுவதால் குடிநீரும் இல்லாமல் எங்கள் ஊா் பாதிக்கும். எனவே ஆழ்குழாய் கிணறு அமைப்பதை அரசு நிறுத்த வேண்டும் என்றனா் கிராம மக்கள்.