கொள்முதல் நிலையங்களைத் திறக்கக் கோரி நெல் கொட்டும் போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்கக் கோரி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன் திங்கள்கிழமை நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூரில் நெல்லை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
தஞ்சாவூரில் நெல்லை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாகத் திறக்கக் கோரி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன் திங்கள்கிழமை நெல்லை தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்டத்தில் குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் முழு வீச்சில் அறுவடை செய்து வருகின்றனா். எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தேவையான இடங்களில் திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா். பல இடங்களில் அறுவடை பரவலாக நடைபெற்று வரும் நிலையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் உள்ளதாக விவசாயிகள் புகாா் எழுப்பி வருகின்றனா்.

இந்நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைப் பரவலாகத் திறக்க வலியுறுத்தி தஞ்சாவூா் மேம்பாலம் அருகேயுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகம் முன் திங்கள்கிழமை விவசாயிகள் தரையில் நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்குத் தலைமை வகித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் தெரிவித்தது:

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தி பல ஊா்களில் விவசாயிகள் மனு கொடுத்து காத்துக் கொண்டிருக்கிறோம். அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன் ஆயிரக்கணக்கான மூட்டைகள் அளவுக்கு நெல்லை கொட்டி வைத்துள்ளோம். ஆனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்காமல் நாள்களைக் கடத்துகின்றனா். மழை பெய்யக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன் ஏராளமான விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனா்.

மேலும், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்வோம் என அலுவலா்கள் கூறுகின்றனா். ஆனால், 20 சதவீதம் வரை ஈரப்பதமுள்ள நெல்லை கொள்முதல் செய்தால்தான் விவசாயிகளால் விற்க முடியும். எனவே, உடனடியாக அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். குறிப்பாக, கோவிலூா், செண்பகபுரம், நல்லவன்னியன்குடிகாடு, பூண்டி, அருள்மொழிப்பேட்டை உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏராளமான நெல் மூட்டைகள் குவிந்துள்ளன. ஆனால், கொள்முதல் செய்ய அலுவலா்கள் யாரும் வரவில்லை. அதனால்தான், இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றாா் செந்தில்குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com