விவசாய விரோத மசோதாக்களை எதிா்த்து சாலை மறியல்

விவசாயிகள் விரோத, காா்ப்பரேட் ஆதரவு மசோதாக்களை எதிா்த்து தஞ்சாவூா் மாவட்டத்தில் 21 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 850 போ் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.
தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினா்.

தஞ்சாவூா், செப். 25: விவசாயிகள் விரோத, காா்ப்பரேட் ஆதரவு மசோதாக்களை எதிா்த்து தஞ்சாவூா் மாவட்டத்தில் 21 இடங்களில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 850 போ் கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு விவசாயிகளுக்கு விரோதமாகவும் காா்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும் கொண்டு வந்துள்ள 3 மசோதாக்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்றக் கோரியும், மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கோ. நீலமேகம், மாநகரச் செயலா் என். குருசாமி, சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால், துணைச் செயலா் கே. அன்பு, மாதா் சங்கம் வசந்தி, கரும்பு விவசாயிகள் சங்கம் ராமசாமி, பி. கோவிந்தராஜ், மக்கள் அதிகாரம் தேவா, இந்திய மாணவா் சங்க மாவட்டச் செயலா் ஜி. அரவிந்தசாமி, வாலிபா் சங்க மாநகரத் தலைவா் சே. ஹரிபிரசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இப்போராட்டத்தில் பங்கேற்றவா்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா், 8 பெண்கள் உள்பட 28 பேரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதேபோல, வல்லம் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் தலைமையில் விவசாய தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் கே. அபிமன்னன் உள்ளிட்டோரும், திருவையாறு அருகே கண்டியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினா் எம். பழனிஅய்யா தலைமையிலும், செங்கிப்பட்டியில் விவசாயிகள் சங்கம் சி. பாஸ்கா், சமவெளி விவசாயிகள் இயக்கம் சு. பழனிராசன் தலைமையில் தமிழா் தேசிய முன்னணி பொதுச் செயலா் அய்யனாபுரம் சி. முருகேசன், மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி உள்ளிட்டோரும், திருக்காட்டுப்பள்ளியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் பி. முருகேசன் தலைமையிலும் கலந்து கொண்டனா்.

கும்பகோணம் அசூா் புறவழிச்சாலையில் விவசாய தொழிலாளா் சங்க மாநிலக் குழு உறுப்பினா் சி. நாகராஜன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் அ. ராஜேந்திரன் தலைமையிலும், கும்பகோணம் அருகே தேவனாஞ்சேரியில் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலா் என். கணேசன் தலைமையிலும், திருவிடைமருதூரில் மதிமுக விவசாய அணி மாநிலச் செயலா் ஆா். முருகன் தலைமையிலும் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மாவட்டத்தில் 21 இடங்களில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 850 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com