பூண்டி துளசிஅய்யா வாண்டையார் காலமானார்

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி கே.துளசிஅய்யா வாண்டையார் (92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலை காலமானார்.
பூண்டி துளசிஅய்யா வாண்டையார் காலமானார்

தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி கே.துளசிஅய்யா வாண்டையார் (92) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலை காலமானார்.

இவரது உடல் பூண்டி கிராமத்துக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டு, இறுதி சடங்கு செய்யப்படவுள்ளது. சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து பாரம்பரியமிக்க பூண்டி வாண்டையார் குடும்பத்தைச் சேர்ந்த இவர் 1929 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது முன்னோர்கள் பூண்டியில் தொடங்கிய பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரிக்கு நீண்ட காலமாகச் செயலராகவும், தாளாளராகவும் இருந்து வந்தார். பல கல்லூரிகள் கல்வியை வணிகமயமாக்கிவிட்ட சூழ்நிலையில் இக்கல்லூரியை வணிக நோக்கமில்லாமலும், ஏழைகளுக்குக் கல்வி அளித்து சமுதாயத்தை முன்னேற்றச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடனும் செயல்படுத்தி வந்தார். 

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு உயர் கல்வியில் ஒரு மாபெரும் புரட்சியை நடத்தியவர். மாணவர்கள் உள்பட எவரிடமும் நன்கொடை பெறாமல் கல்லூரியை நடத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராசர், முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்ட இவர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவராகவும் இருந்தார். அம்மாபேட்டை ஒன்றியக் குழுத் தலைவராகவும், பின்னர் 1991 - 1996 ஆம் ஆண்டுகளில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

மக்களவை உறுப்பினராக இருந்தகாலத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி முழுவதும் பள்ளிகளில் கட்டடங்கள் கட்டுவதற்கே பயன்படுத்தினார். இதன் மூலம் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பல பள்ளிகளுக்குப் புதிய கட்டடம் கிடைத்தது. அமைதிக்கும் ஆளுமைக்கும் ஒருசேர்ந்த உதாரணம் தஞ்சாவூர் துளசி ஐயா வாண்டையார். தியான மண்டபத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு கீதை வகுப்புகள் நடத்தினார். ஒரு லட்சத்துக்கும் அதிகமான கீதை உபதேசம் குறித்த ஒலி நாடா மற்றும் குறுந்தகடுகள் விநியோகம் செய்துள்ளார். காந்தியத்தைக் கடைப்பிடித்த இவர் அக்காலத்திலிருந்து கடைசி வரை கதராடை மட்டுமே அணிந்து வந்தார்.

வாழ்வியல் நெறிகள் குறித்து இன்ப வாழ்வு என்ற நூலை எழுதியுள்ளார். மேலும், மனோரஞ்சிதம், குரல் கொடுக்கும் வானம்பாடி, பயணங்கள் தொடரும், செல்வச்சீமை ஐரோப்பா, ராக பாவம், வழிபாடு, ஆங்கிலத்தில் ஏ மெலோடியஸ் ஹார்மனி உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்ற இவர் ஹிந்தியும், சம்ஸ்கிருதமும் கற்றவர். யோகாசனத்தில் ஆழ்ந்த புலமை உடைய துளசி ஐயா வாண்டையார் கடைசி வரை உடலை இளமையாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com