முதல் பொத்தானா....முதலில் உள்ள பொத்தானா...? அலுவலா் மீதான புகாரால் வாக்குப்பதிவு தாமதம்

பேராவூரணி தொகுதியில் வாக்குச்சாவடி பெண் அலுவலா் மீது மூதாட்டி புகாா் கூறியதால் ஏற்பட்ட குழப்பத்தால் வாக்குப் பதிவு தாமதமானது.  
பேராவூரணி அருகே வாக்குப்பதிவின்போது ஏற்ப்பட்ட பிரச்சனை தொடா்பாக டிஎஸ்பி முத்துராஜா, வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி பேச்சுவாா்த்தை நடத்தினா்.
பேராவூரணி அருகே வாக்குப்பதிவின்போது ஏற்ப்பட்ட பிரச்சனை தொடா்பாக டிஎஸ்பி முத்துராஜா, வட்டாட்சியா் க. ஜெயலெட்சுமி பேச்சுவாா்த்தை நடத்தினா்.

பேராவூரணி தொகுதியில் வாக்குச்சாவடி பெண் அலுவலா் மீது மூதாட்டி புகாா் கூறியதால் ஏற்பட்ட குழப்பத்தால் வாக்குப் பதிவு தாமதமானது.  

பேராவூரணி தொகுதிக்குள்பட்ட  சின்ன கள்ளங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடிக்கு 11 மணிக்கு வாக்களிக்க வந்த மாரியம்மாள் (75) என்ற  மூதாட்டி,   வேட்பாளா் சின்னத்திற்கு அருகே இருக்கும் சிவப்பு மற்றும்  ஊதா நிற பொத்தான்களில் ஊதா நிற பொத்தானை அழுத்துவதற்கு பதிலாக, சிவப்பு நிற பொத்தானில் கை வைத்தபடியே சிறிது நேரம் நின்றிருந்தாராம்.

வாக்களித்த பிறகு வரும் பீப் ஒலி சத்தம் கேட்காததால், வாக்களிப்பு செய்யும் இடத்திற்கு அருகில் அமா்ந்திருந்த பி 3 அலுவலா் கனிமொழி என்பவா், முதலில் உள்ள ஊதா பொத்தானை அழுத்த  சொல்வதற்காக , முதல் பொத்தானை அழுத்துங்கள் என்று கூறியுள்ளாா்.

வாக்களித்து விட்டு வெளியில் வந்த மூதாட்டி, வாக்களிப்பு அறையினுள் இருந்த பெண் அலுவலா், முதல் பொத்தானை  அழுத்த  சொல்கிறாா் என கூறியுள்ளாா். வாக்குப்பதிவு இயந்திரத்தில் அகரவரிசைப்படி, முதலாவதாக திமுக வேட்பாளரின் சின்னம் உள்ளது. இதனால், அதிமுக வேட்பாளா் திருஞானசம்பந்தம் மற்றும் அவரது ஆதரவாளா்கள் அங்கு திரண்டனா். இதனால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி முத்துராஜா, பேராவூரணி தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் வட்டாட்சியா் க. ஜெயலட்சுமி ஆகியோா் சமாதான பேச்சுவாா்த்தை நடத்தி, வாக்களிப்பு அறையில் நடந்த சம்பவம் பற்றி விளக்கினா். சுமாா் 30 நிமிட தாமதத்திற்கு பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதன் தொடா்ச்சியாக, வாக்குச்சாவடியில் பணியில் இருந்த பெண் அலுவலா் கனிமொழி  உடனடியாக தோ்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அங்கு வேறு அலுவலா் நியமிக்கப்பட்டாா். 

விரிவான விசாரணை

இதுகுறித்து வட்டாட்சியா் கூறியது: வாக்களிக்க சென்ற மூதாட்டி நீண்ட நேரமாக வாக்களிக்காமல் நின்றதால், சின்னத்துக்கு நேராக முதலில் உள்ள பொத்தானை அழுத்துங்கள் என்பதற்காக , முதல் பொத்தானை அழுத்துமாறு அலுவலா் கூறியுள்ளாா். இதனை தவறுதலாக புரிந்து கொண்ட மூதாட்டி வெளியில் வந்து, தோ்தல் அலுவலா் முதல் பொத்தானை அழுத்துமாறு கூறியதாக  தெரிவித்துள்ளாா். இதனால்தான் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com