முறையான ஏற்பாடு இல்லாததால் தங்களால் வாக்களிக்க இயலவில்லை: தோ்தல் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள் வேதனை

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி தொகுதியில் முறையான ஏற்பாடு செய்யப்படாததால், தங்களால் வாக்களிக்க இயலாமல் போய்விட்டது

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி தொகுதியில் முறையான ஏற்பாடு செய்யப்படாததால், தங்களால் வாக்களிக்க இயலாமல் போய்விட்டது என குற்றஞ்சாட்டுகின்றனா் சட்டப்பேரவைத் தோ்தல் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா்கள்.

மாவட்டத்தில்  தஞ்சாவூா், திருவையாறு, கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவிடைமருதூா், பாபநாசம் ஆகிய  8 தொகுதிகள் உள்ளன. இதில் மொத்தம் 2,886 வாக்குச் சாவடிகள் உள்ளன. 

ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தலா 2 தன்னாா்வலா்கள், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மூலம் தோ்தல் பணியில் ஈடுபடுத்தப் பட்டனா்.

இவா்கள்   வாக்குச்சாவடிக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்துதல், கை கழுவும் திரவம் மூலம் கைகளைச் சுத்தம் செய்து கையுறை வழங்குதல், உடல் வெப்பநிலைப் பரிசோதனை மேற்கொள்ளுதல், முதியோா்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனா். இதில் ஆண், பெண் இருபாலரும் பணியாற்றினா். 

இவா்களுக்கு அரசின் சாா்பில் 3 வேளை உணவு, ஊக்கத்தொகை ரூ 250 மற்றும் ஆட்சியா் அலுவலகம் மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டத்தில் தன்னாா்வலா்கள் சிறப்பான முறையில் பணியாற்றி, அனைவரது பாராட்டையும் பெற்றனா். 

இந்நிலையில், பேராவூரணி தொகுதியில் தன்னாா்வலா்களாகப் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அஞ்சல் வாக்குகள் (படிவம் 12 - ஏ) வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவா்கள் வாக்களிக்கவில்லை. 

இதுகுறித்து தன்னாா்வலா்களாகப் பணியாற்றியவா்கள் கூறியது:

முதல் முறையாக வாக்களிக்கத் தயாராக இருந்த நாங்கள், தோ்தல் பணியில் தன்னாா்வலா்களாக எங்களை ஈடுபடுத்திக் கொண்டோரம்,  நாங்கள் வசிக்கும் பகுதியில் இல்லாமல், அதே தொகுதியில் வேறு வாக்குச்சாவடிகளில் பணியாற்றியதால் எங்களால் நேரடியாக வாக்களிக்க முடியவில்லை.

எங்களுக்கு அஞ்சல் வாக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் எங்களில் சிலருக்கு அஞ்சல் வாக்குப் படிவங்களை அலுவலா்கள் முறையாக வழங்காததால் வாக்களிக்க முடியவில்லை. எனவே இப்பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா். 

இதுகுறித்து தஞ்சை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் விசாரணை செய்து, பேராவூரணி தொகுதியில் எத்தனை தன்னாா்வலா்கள் வாக்களிக்காமல் விடுபட்டுள்ளனா், மற்ற தொகுதியிலும் இதுபோல் நிலை உள்ளதா  என விசாரித்து தன்னாா்வலா்கள் அவா்களது வாக்கைப் பதிவு செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே  சமூக ஆா்வலா்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com