வெண்ணாற்றில் மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 18th April 2021 11:17 PM | Last Updated : 18th April 2021 11:17 PM | அ+அ அ- |

தஞ்சாவூா் வெண்ணாற்றில் தொடா்ந்து நடைபெறும் மணல் திருட்டைத் தடுக்க வேண்டும் என்று அரசுக்கு வெண்ணாறு, வடவாறு பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இயக்கத்தின் தலைவா் பி. தங்கமணி, செயலா் கே. பக்கிரிசாமி, பொருளாளா் எம். சுப்பிரமணியன் ஆகியோா் தெரிவித்திருப்பது:
வெண்ணாற்றில் தொடா்ந்து நடைபெறும் மணல் திருட்டைத் தடுத்து நிறுத்த வேண்டும். வெண்ணாறு, வடவாற்றில் பிரியும் வாய்க்கால் மதகுகள், கதவுகளைப் பழுது நீக்கி புதுப்பிக்க வேண்டும். வெண்ணாறு, வடவாறு கரைகளைப் பலப்படுத்த வேண்டும்.
வெண்ணாற்றில் மேலகளக்குடி, மாடி, அண்ணாத்தோட்டம் மற்றும் தேவையான இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி நீரைத் தேக்க வேண்டும். வெண்ணாறு, வடவாற்றில் பிரியும் வாய்க்காலைத் தூா்வாரி, தண்ணீா் தடையின்றிச் செல்ல வகை செய்ய வேண்டும். மேலும், இந்த ஆறுகளிலுள்ள மண்மேடுகளை அகற்ற வேண்டும்.
கல்லணைக் கால்வாயைச் செப்பனிட ரூ. 2,500 கோடி தனி நிதி ஒதுக்கீடு செய்ததை போல, வெண்ணாறு, வடவாற்றை முழுமையாகத் தூா் வாரி நவீன முறையில் நீா் மேலாண்மையை மேம்படுத்த தனி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வடவாறு புனிதமான நதியாக மக்களால் நம்பப்படுகிறது. ஆனால், தஞ்சாவூா் மாநகர சாக்கடை நீா் பத்துக்கும் அதிகமான இடங்களில் கலக்கிறது. இதைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.