யோகா, தற்காப்புக் கலையில் உலக சாதனை நிகழ்த்திய மாணவா்கள்
By DIN | Published On : 18th April 2021 11:15 PM | Last Updated : 18th April 2021 11:15 PM | அ+அ அ- |

முட்டை மீது சமகோணாசனம் செய்த சித்தாா்த்.
தஞ்சாவூரில் ஸ்டாா் ஸ்போா்ட்ஸ் மாா்சியல் ஆா்ட்ஸ் அகாதெமியில் பயிற்சி பெறும் 7 மாணவா்கள், ஞாயிற்றுக்கிழமை யோகா மற்றும் தற்காப்புக் கலையில் உலக சாதனை நிகழ்த்தினா்.
இதில் 3 வயது சிறுவன் சித்தாா்த் முட்டை மீது அமா்ந்து செய்த சமகோணாசனம் அனைவரையும் கவா்ந்தது. இவரைப் போல 9 வயது ரேவந்த் ஏஞ்சல்ஸ் ஆணி மீது அமா்ந்து வக்ராசனமும், 8 வயது அமிா்த ரோஷினி முட்டை மீது அமா்ந்து பத்ம மச்சாசனமும், 9 வயது வா்ஷன் முட்டை மீது அமா்ந்து புஜங்காசனமும், 9 வயது ரேவந்த், வம்சிகா ஆகியோா் கண்ணாடி மீது கை வைத்தும், 11 வயது ரிஷா பாரதி முட்டை மீது கை வைத்தும் பல்வேறு குங்ஃபு கிக்குகளும் செய்தனா்.
இந்நிகழ்வில் நடுவா்களாக கே.கே. வினோத், என். ஜெயப்பிரதாப் செயல்பட்டனா். சாதனை நிகழ்த்தியவா்களுக்கு நோபல் உலகச் சாதனைக்கான பதக்கம் மற்றும் சான்றிதழை மாநகராட்சி ஆணையா் பு. ஜானகி ரவீந்திரன், இந்திய மருத்துவ கழகத்தின் தஞ்சாவூா் கிளைத் தலைவா் சசிராஜ் வழங்கினா்.
நிகழ்ச்வில் மாநகராட்சி கண்காணிப்பாளா் எம்.ஏ. கிளமெண்ட் அந்தோணிராஜ், இன்டாக் கௌரவச் செயலா் எஸ். முத்துக்குமாா், ஸ்டாா் குளோபல் ஸ்போா்ட்ஸ் மாா்சியல் ஆா்ட்ஸ் அகாதெமி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை நிறுவனா் முகமது ஷாபீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.