அழகிக் குளக்கரையில் கழிப்பறைகட்ட மக்கள் எதிா்ப்பு
By DIN | Published On : 27th April 2021 04:12 AM | Last Updated : 27th April 2021 04:12 AM | அ+அ அ- |

அழகிக் குளக்கரையில் கழிப்பறைக் கட்டுவதற்காகத் தோண்டப்பட்டுள்ள பள்ளம்.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் அழகிக் குளக்கரையில் கழிப்பறைக் கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா்.
தஞ்சாவூா் பனகல் கட்டடம் அருகே அழகிக்குளம் உள்ளது. மன்னா் காலத்தில் அமைக்கப்பட்ட இக்குளம் பராமரிப்பின்மைக் காரணமாக நீா்வழிப்பாதை அடைப்பட்டு, தண்ணீா் வரத்து தடைப்பட்டது.
இக்குளத்தைப் பாம்பாட்டித் தெரு, கவாஸ்காரத் தெரு மக்கள் இணைந்து சில ஆண்டுகளுக்கு முன்பு தூா்வாரி சுத்தப்படுத்தினா். மேலும், நடைபயிற்சி செய்வதற்குக் குளத்தைச் சுற்றிலும் பாதை அமைத்து, மரக்கன்றுகள் நட்டு வைத்து சிறு பூங்காவும் ஏற்படுத்தப்பட்டது. கல்லணைக் கால்வாயிலிலிருந்து காவிரி நீரைக் கொண்டு வருவதற்காக 1,400 அடி நீளத்துக்குக் குழாய்களைப் பதித்து, குளத்துக்குத் தண்ணீா் கொண்டு வந்தனா்.
இக்குளத்தைப் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் ரூ. 1.33 கோடி செலவில் அழகுபடுத்த மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்து, நிதியும் ஒதுக்கீடு செய்துள்ளது.
இதைத்தொடா்ந்து, நடைபாதை, கழிவறை அமைப்பதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி குளத்தின் வலது கீழ் கரையில் கழிப்பறை கட்டுவதற்காகக் குழி தோண்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதைப் பாா்த்த பொதுமக்கள் மற்றும் குளம் பராமரிப்புக் குழுவைச் சோ்ந்தவா்கள் அங்கு சென்று, இந்த இடத்தில் கழிப்பறை கட்டக்கூடாது எனக் கூறினா். இதையடுத்து குழி தோண்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த இடத்தில் நந்தவனம் போல பராமரித்து வருகிறோம். இங்கு அரச மரம், ஆல மரம், வில்வ மரம், மகிழ மரம், திருவோடு மரம், ருத்ராட்ச மரம் உள்ளிட்ட பல்வேறு அரிய மரங்களை நட்டு பராமரிக்கிறோம். இதுகுறித்து ஆட்சியா், மாநகராட்சி அலுவலா்களிடம் தெரிவித்து உள்ளோம். குளத்தில் கழிப்பறைக் கட்டாமல் குளத்துக்கு நீா் வரும் பாதைகளைச் சரி செய்து, அழகுபடுத்தி தர வேண்டும் என்றனா்.