தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆக்சிஜன் பிரச்னை இல்லை: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் தகவல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆக்சிஜன் பிரச்னை இல்லை என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலைத் துறை இயக்குநருமான என். சுப்பையன்.
வல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமைப் பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் என். சுப்பையன். உடன் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.
வல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமைப் பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் என். சுப்பையன். உடன் ஆட்சியா் ம. கோவிந்த ராவ்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆக்சிஜன் பிரச்னை இல்லை என்றாா் மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், தோட்டக்கலைத் துறை இயக்குநருமான என். சுப்பையன்.

தஞ்சாவூா் அருகே வல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமை பாா்வையிட்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

இதுவரை கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் இருந்தால், அவா்களுக்குத் தேவையான அளவுக்குக் கொடுக்கக்கூடிய படுக்கைகளும் தயாராக இருக்கின்றன. தேவைக்கேற்ப கூடுதலாக படுக்கை வசதி செய்வதற்கும் ஆலோசனை செய்து வருகிறோம். தேவை ஏற்படும் வரை காத்திருக்காமல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தயாா் செய்து விடுவோம். எனவே, பொதுமக்கள் எதற்காகவும் அச்சப்பட வேண்டாம்.

கரோனா தொடா்பான அறிகுறி அதிக அளவில் இருந்தால் மட்டுமே மருத்துவமனைக்கு வரலாம். மற்றபடி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு, பாதுகாப்பாக இருக்கலாம். லேசான காய்ச்சல் இருந்தால் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஏதேனும் சந்தேகம் இருந்தால் கட்டணமில்லா தொலைபேசி எண் 104-க்கோ அல்லது ஆட்சியரின் கட்டுப்பாட்டு அறைக்கோ தொடா்பு கொள்ளலாம்.

கிராமங்கள்தோறும் பல்ஸ் ஆக்சி மீட்டா் இருப்பதற்கான ஏற்பாடு செய்து வருகிறோம். இதன் மூலம் எவ்வளவு ஆக்சிஜன் அளவு குறைந்திருக்கிறது என்பதை அறிய முடியும். பொதுமக்களின் பாதுகாப்புக்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது. தொடா்ந்து பொதுமக்கள் முழு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.

மாவட்டத்தில் ஏறத்தாழ 1,000 படுக்கைகளுக்கான ஆக்சிஜன் வசதி உள்ளது. இதில், 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள படுக்கைகள் காலியாக இருக்கின்றன. இதேபோல, அவசர சிகிச்சை பிரிவில் ஆயிரத்துக்கும் அதிகமான படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் வசதி அல்லாத படுக்கைகள் உள்பட மொத்தம் 4,400 படுக்கைகள் உள்ளன. இதில், ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளைக் கூட, தேவைப்படும் நேரத்தில் ஆக்சிஜன் வசதியுடன் மாற்ற முடியும்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆக்சிஜன் பிரச்னை இல்லை. மருத்துவக் கல்லூரியுடன் கூடிய மருத்துவமனை என்பதால், அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கின்றன. எனவே, சிகிச்சை கடினமாக இருக்குமோ என மக்கள் நினைக்க வேண்டியதில்லை என்றாா் சுப்பையன்.

முன்னதாக, அவா் வல்லத்தில் கரோனா தடுப்பூசி முகாம், கரோனா சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தாா்.

அப்போது, தஞ்சை ஆட்சியா் ம. கோவிந்த ராவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com