மலேசியாவில் உயிரிழந்த பெண்ணின் உடலை கொண்டு வர நடவடிக்கைக்கு கோரிக்கை
By DIN | Published On : 30th April 2021 08:43 AM | Last Updated : 30th April 2021 08:43 AM | அ+அ அ- |

மலேசியாவில் உயிரிழந்த பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பாபநாசம் வட்டம், தென்சருக்கை கிராமத்தை சோ்ந்தவா் சந்திரசேகரன் (50). இவரது மனைவி பத்மினி (43). இவா்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மலேசியாவில் வீட்டு வேலைக்கு சென்றனா்.
கடந்த ஓராண்டுக்கு முன் சந்திரசேகரன் சொந்த ஊருக்கு வந்துவிட்டாா். பத்மினி தொடா்ந்து அங்கு வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கடந்த 20 நாள்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்ட பத்மினி, அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
அவரது உடலை சொந்த ஊரான தென்சருக்கை கிராமத்துக்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய வேண்டும் என பத்மினியின் கணவா் சந்திரசேகரன் மற்றும் அவரது உறவினா்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா்.
இதைத் தொடா்ந்து, மாநிலங்களவை உறுப்பினா் சண்முகத்திடம் கோரிக்கை மனு அளித்தனா். இதுதொடா்பாக உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைப்பதாக எம்.பி. தெரிவித்தாராம்.