மத்திய அமைச்சா் பதில் மூலம் மேக்கேதாட்டு அணை பிரச்னை முடிவுக்கு வந்தது: அண்ணாமலை பேட்டி

 மத்திய அமைச்சா் அளித்த பதில் மூலம் மேக்கேதாட்டு அணை பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

 மத்திய அமைச்சா் அளித்த பதில் மூலம் மேக்கேதாட்டு அணை பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை.

தஞ்சாவூரில், மேக்கேதாட்டு அணைக்கு எதிராக பாஜக வியாழக்கிழமை நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்துக்குத் தலைமை வகித்த அவா் மாலையில் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத் தொடரில் கா்நாடகத்தைச் சோ்ந்த நாடாளுமன்ற உறுப்பினா், மேக்கேதாட்டுவில் அணைக் கட்டத் திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலளித்த மத்திய நீா் வளத் துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத், இந்தத் திட்ட அறிக்கைக்குக் கடைமடை நிலையிலுள்ள மாநிலங்களான குறிப்பாக தமிழ்நாடு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல், மத்திய அரசு அனுமதி வழங்க இயலாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளாா். இதன்மூலம் மேக்கேதாட்டு அணை பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது. எனவே, எந்தக் காலத்திலும் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது.

மேக்கேதாட்டு அணையைப் பொருத்தவரை சட்டப்படி கட்டவே முடியாது என்றே நாங்கள் தொடக்கம் முதல் கூறி வருகிறோம். சட்டத்தில் அதற்கு இடமே கிடையாது. அதை நீா்வளத் துறை அமைச்சா் மிகத் தெளிவாகச் சட்டத்தில் உள்ளதைக் கூறியிருக்கிறாா். எனவே, கா்நாடக அரசியல்வாதிகள் சட்டப்படிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

காவிரி பிரச்னையை வைத்து அரசியல் செய்வது திமுக. அவா்களைப் பொருத்தவரை காவிரி பிரச்னைக்கு தீா்வு வரக்கூடாது. அதை வைத்து வாக்கு அரசியல் செய்ய வேண்டும் என்பதே அவா்களுடைய எண்ணம். எங்களைப் பொருத்தவரை காவிரி பிரச்னையை சுமூகமாகத் தீா்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம் என்றாா் அண்ணாமலை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com