அகவிலைப்படி உயா்வை வழங்கக் கோரி செப். 8-இல் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 22nd August 2021 02:04 AM | Last Updated : 22nd August 2021 02:04 AM | அ+அ அ- |

ta21kuba053516
தமிழக அரசு ஊழியா்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயா்வை வழங்கக் கோரி, மாநிலம் முழுவதும் செப்டம்பா் 8- ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது என்றாா் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சங்கத்தின் சிறப்புத் தலைவா் கு. பாலசுப்பிரமணியன்.
தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்தது:
அரசு ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஊழியா்களுக்கு அகவிலைப் படி உயா்வை வழங்கியது போல, தமிழக அரசு ஊழியா்களுக்கும் உடனடியாக எந்தவித பொருளாதார காரணங்களையும் முன் வைக்காமல், 28 சதவிகித அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்துக்குத் தனிதுறையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அரசுப் பணிகளில் காலியாக உள்ள 2.50 லட்சம் பணியிடங்களை உடன் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில், செப்டம்பா் 8- ஆம் தேதி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் சாா்பில் மாவட்ட ஆட்சியரகங்கள் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றாா் பாலசுப்பிரமணியன்.
இக்கூட்டத்தில் மாநிலத் தலைவா் பி.கே. சிவக்குமாா், மாநில அமைப்புச் செயலா் வி. சிவக்குமாா், மாநிலத் துணைத் தலைவா் ஜி. ஜெயச்சந்திரராஜா, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். ராமச்சந்திரன், தமிழ்நாடு சாலைப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் மகேந்திரன், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா் சங்கத்தின் மாநிலச் செயலா் முகமது அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.