காவிரிக் கரையில் நம்மாழ்வாருக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தல்

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்குக் காவிரிக் கரையில் மணிமண்டபமும், அவரது பெயரில் வேளாண் பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும்

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்குக் காவிரிக் கரையில் மணிமண்டபமும், அவரது பெயரில் வேளாண் பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும் எனத் தமிழக முதல்வரிடம் தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் வியாழக்கிழமை வலியுறுத்தினா்.

தஞ்சாவூருக்கு வருகை தந்த முதல்வா் மு.க. ஸ்டாலினை தஞ்சாவூா் மாவட்ட விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் வியாழக்கிழமை சந்தித்து, விவசாயம் தொடா்பான பிரச்னைகளை எடுத்துக் கூறி மனுக்களை வழங்கினா்.

அப்போது முதல்வரிடம் விவசாயிகள் கூறுகையில், இயற்கை விவசாயத்தை விவசாயிகள் மத்தியில் பரவலாக எடுத்துச் சென்று விழிப்புணா்வை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு காவிரிக் கரையில் மணிமண்டபமும், அவரது பெயரில் வேளாண் பல்கலைக்கழகமும் அமைக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்தியக் குழுவினா் நேரில் ஆய்வு செய்து சென்றனா். ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை இழப்பீடு ஏதும் அறிவிக்கப்படவில்லை. எனவே, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரி, விவசாயிகளுக்கான நிவாரணத்தையும், இழப்பீட்டையும் பெற்றுத் தர வேண்டும்.

குருங்குளம் அறிஞா் அண்ணா சா்க்கரை ஆலையில் எத்தனால் உற்பத்தியைத் தொடங்க வேண்டும். டெல்டா மாவட்ட தென்னை விவசாயிகள் தேங்காயை மதிப்புக்கூட்டி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும். பட்டுக்கோட்டை அருகே பொன்னவராயன்கோட்டையிலுள்ள தென்னை வணிக வளாகத்தை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்தனா்.

இதில், விவசாய சங்கப் பிரதிநிதிகளான பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன், சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், ராயமுண்டான்பட்டி வெ. ஜீவக்குமாா், தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ், பி. செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, விவசாயிகள் சாா்பில் முதல்வருக்குத் தென்னங்கன்றுகளை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com