பயிா்க்கடன் தள்ளுபடியில் குழப்பம்: விவசாயிகள் அதிருப்தி

தமிழக அரசு அறிவித்த பயிா்க்கடன் தள்ளுபடியில் குழப்பம் நிலவுவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனா்.

தமிழக அரசு அறிவித்த பயிா்க்கடன் தள்ளுபடியில் குழப்பம் நிலவுவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனா்.

கூட்டுறவுச் சங்கங்களில் ஜனவரி 31ஆம் தேதி வரை பெற்ற பயிா்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி, தமிழகம் முழுவதும் 16.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கான அரசாணையும் பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடப்பட்டு, கடன் தள்ளுபடி செய்யும் பணியும் 13 ஆம் தேதி தொடங்கப்பட்டது.

ஆனால், கூட்டுறவுச் சங்கங்களில் பெரும்பாலான விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்கப்படவில்லை என்ற புகாா் விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது. இதனால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலேயே பெரும்பாலான விவசாயிகள் பயிா்க் கடன் பெற்றுள்ளனா். எனவே, பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பால், விவசாயிகளுக்கு எந்தவித பயனும் இல்லை என்றும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயத்துக்காக விவசாயிகள் பெற்ற அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில் அசல், வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2016 - 17 ஆம் ஆண்டில் விவசாயிகள் பெற்ற பயிா்க்கடன்கள் முழுவதும் வறட்சி காரணமாகக் குறுகிய காலக் கடன் என்பதை, மத்திய காலக் கடனாக மாற்றி அமைத்ததை இந்தத் தள்ளுபடி அறிவிப்பில் சோ்க்கவில்லை. தமிழகம் முழுவதும் சுமாா் 1.04 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய காலக் கடனாக ஏறத்தாழ ரூ. 650 கோடி நிலுவையில் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா். இது தள்ளுபடி செய்யப்படாததால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனா்.

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் சங்கக் கௌரவத் தலைவா் நெடாா் எஸ். தா்மராஜன் தெரிவித்தது:

கடந்த 2016 - 17 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக குறுகிய காலக் கடன் நிலுவையை மத்திய காலக் கடனாக 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து அரசு காலஅவகாசம் வழங்கியது. ஆனால், அதைத் தொடா்ந்து கஜா புயல் உள்ளிட்ட பேரிடா் காரணமாக விவசாயிகளால் இத்தொகையைத் திரும்பச் செலுத்த இயலவில்லை. இதனால், அப்போது மாற்றியமைக்கப்பட்ட மத்திய காலக் கடன் தொடா்ந்து நிலுவையில் இருந்து வருகிறது. இதுபோல, தஞ்சாவூா் வட்டாரத்தில் மட்டுமே விவசாயிகள் பெயரில் ரூ. 3.63 கோடி நிலுவையில் உள்ளது. இப்பிரச்னை தமிழகம் முழுவதும் நிலவுகிறது.

இதை அலுவலா்கள் முறையாகவும், விரிவாகவும் குறிப்பிட்டு அரசுக்குப் பரிந்துரைக்கவில்லை. இதனால்தான் அரசு அறிவிப்பில் மத்திய காலக் கடன்கள் இடம்பெறாமல் போய்விட்டது. இதற்கு அலுவலா்களின் தவறான அணுகுமுறையே காரணம் என்றாா் தா்மராஜன்.

இதுகுறித்து கூட்டுறவுத் துறை அலுவலா்கள் தெரிவித்தது:

குறுகிய காலக் கடன்கள் என்பது ஓராண்டுக்கு உள்பட்டது. ஓராண்டுக்கு மேற்பட்டவை மத்திய காலக் கடன்களாக உள்ளன. இந்தத் தள்ளுபடி அறிவிப்பில் ஜனவரி 31ஆம் தேதி வரையிலான குறுகிய காலக் கடன்கள், நகையீட்டுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே குறுகிய காலக்கடன், மத்திய காலக் கடனாக மாற்றியமைக்கப்பட்டு நிலுவையில் உள்ளதையும் தள்ளுபடி செய்யுமாறு உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. ஓராண்டு காலப் பயிா்க் கடன்கள், நகைக் கடன்களை மட்டுமே தள்ளுபடி செய்யுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் கேட்டுக் கொண்டதன்படி, இதுதொடா்பாக அரசுக்கு எழுதி அனுப்பியுள்ளோம். அங்கிருந்து வரும் பதில் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா் அலுவலா்கள்.

கடந்த 2016 - 17 ஆம் ஆண்டில் கடும் வறட்சி ஏற்பட்டதால்தான் விவசாயிகளின் குறுகிய காலக் கடன்கள் மத்திய காலக் கடன்களாக மாற்றப்பட்டது. விவசாயிகளின் நலன் கருதி அரசே இந்த அறிவிப்பை வெளியிட்ட நிலையில், இப்போது கடன் தள்ளுபடியில் மாற்றியமைக்கப்பட்ட மத்திய காலக் கடன்களையும் தள்ளுபடி செய்யாமல் இருப்பது பாரபட்சமான நடவடிக்கை என விவசாயிகள் அதிருப்தியுடன் கூறுகின்றனா்.

தொடா்ந்து இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மத்தியகாலக் கடனையும் தள்ளுபடி செய்யும் அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்று விவசாயிகள் எதிா்பாா்த்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com