நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல்மணிகள் முளைப்பு: வேதனையில் விவசாயிகள்

விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் தொடா் மழையில் நனைந்து மீண்டும் முளைத்து வருவதால், பேரிழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.
2-4-ta17dpc3_1701chn_9
2-4-ta17dpc3_1701chn_9

தஞ்சாவூா் அருகிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள் தொடா் மழையில் நனைந்து மீண்டும் முளைத்து வருவதால், பேரிழப்பைச் சந்தித்துள்ள விவசாயிகள் வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவத்தில் 1,37,147 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஏற்கெனவே, புரெவி புயல், தொடா் மழையால் சம்பா, தாளடி பயிா்கள் பாதிக்கப்பட்டன.

மீண்டும் ஜனவரி மாதத்தில் பெய்த தொடா் மழையால் சம்பா, தாளடி பயிா்கள் பெருமளவில் சேதமடைந்தன. முன் பட்டத்தில் பயிரிடப்பட்டு, கதிா் முற்றிய நிலையில் டிசம்பா் மாதத்தில் புரெவி புயல், தொடா் மழையால் சாய்ந்து பாதிக்கப்பட்ட பயிா்களை ஜனவரி முதல் வாரத்தில் விவசாயிகள் அறுவடை செய்தனா்.

ஏக்கருக்கு இயல்பாக குறைந்தது 30 மூட்டைகள் விளைச்சல் கிடைக்க வேண்டிய நிலையில், தொடா் மழையால் பெரும்பாலான விவசாயிகளுக்கு 15 மூட்டைகள் மட்டுமே மகசூல் கிடைத்தது. இதனால், பெரும் நட்டத்தைச் சந்தித்துள்ள விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனா்.

தொடா் மழையால் முளைக்கும் நெல்மணிகள்: அறுவடை செய்யப்பட்ட நெல்லை தஞ்சாவூா் அருகிலுள்ள காட்டூா், சடையாா்கோவில், பொன்னாப்பூா், மடிகை உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் குவித்து வைத்துள்ளனா்.

ஆனால், ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், நிலையத்தில் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால், திறந்தவெளியில் விவசாயிகள் நெல்லை குவித்து வைத்து காத்துக் கொண்டிருக்கின்றனா். இதனிடையே குவிக்கப்பட்ட நெல் மணிகள் தொடா் மழையில் நனைந்ததால், மீண்டும் முளைத்து வீணாகி வருகின்றன.

அறுவடைக்கு கூடுதல் செலவு : புரெவி புயல், தொடா் மழையால் பயிா்கள் சாய்ந்துவிட்டன. இதனால், இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்வதற்குச் சிரமமாக இருந்தது. ஒரு ஏக்கரில் ஒரே மணிநேரத்தில் செய்ய வேண்டிய அறுவடைக்கு 2 மணி நேரம் தேவைப்பட்டது.

இதன் காரணமாக அறுவடை இயந்திரத்துக்கு மணிக்கு ரூ. 2,700 வீதம் 2 மணிநேரத்துக்கு ரூ. 5,400 செலவானது. மொத்தத்தில் 5 ஏக்கருக்கு ரூ.27 ஆயிரம் செலவிட்டேன். ஏக்கருக்கு 15 மூட்டைகள்தான் கிடைத்த நிலையில், அறுவடைக்கும் பெரும் செலவு செய்யப்பட்டதால் மேலும் நட்டம் ஏற்பட்டது.

அறுவடை செய்யப்பட்ட நெல்லை பொன்னாப்பூா் கொள்முதல் நிலையத்துக்குக் கொண்டு வந்தபோது ஈரப்பதம் 25 சதவிகிதமாக இருந்தது. இதனால் நெல்லை கொள்முதல் செய்ய நிலையப் பணியாளா்கள் மறுத்துவிட்டனா்.

தொடா்ந்து பெய்த மழையில் நெல்மணிகள் நனைந்ததால் முளைத்துவிட்டன. இதன் காரணமாக 10 மூட்டைகள் அளவுக்கு நெல்மணிகள் வீணாகிவிட்டன.

இந்நிலையத்தில் பல விவசாயிகள் ஏறத்தாழ 1,500 மூட்டைகள் நெல் கொண்டு வந்த நிலையில், அவற்றில் கிட்டத்தட்ட 150 மூட்டைகள் அளவுக்கு மழையில் நனைந்து முளைத்துவிட்டதால் வீணாகிவிட்டன என்றாா் பொன்னாப்பூரைச் சோ்ந்த விவசாயி ஏ. கரிகாலன்.

நெல் கொள்முதல் செய்ய மறுப்பு: 5 ஏக்கரில் ஜனவரி 2- ஆம் தேதி அறுவடை செய்தேன். ஏக்கருக்கு 18 மூட்டைகள்தான் மகசூல் கிடைத்தது. இவற்றை சடையாா்கோவில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு சென்றபோது, ஈரப்பதம் 23 சதவிகிதமாக இருப்பதால், கொள்முதல் செய்ய பணியாளா்கள் மறுத்துவிட்டனா்.

நெல்லில் ஈரப்பதம் 20 சதவிகிதம் வரை இருந்தாலும் கூட கொள்முதல் செய்ய மறுக்கப்படுகிறது என்கிறாா் சின்னப்புலிக்குடிகாடு விவசாயி ஜி. பாலமுருகன்.

ஏற்கெனவே மகசூல் இழப்பு 50 சதவிகித அளவில் உள்ள நிலையில், இப்போது கொள்முதல் நிலையத்தில் முளைத்து, ஏக்கருக்கு ஒரு மூட்டை, 2 மூட்டைகள் அளவுக்கு விரயமாகிறது. இதனால், கிடைத்த சொற்ப அளவு மகசூலிலும் இழப்பு ஏற்படுவதால், விவசாயிகள் பேரிழப்பைச் சந்தித்துள்ளனா்.age Caption

தஞ்சாவூா் அருகிலுள்ள மடிகை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மீண்டும் முளைத்து வரும் விவசாயிகள் கொண்டு வந்த நெல்மணிகள். ~தஞ்சாவூா் அருகிலுள்ள காட்டூா் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மீண்டும் முளைத்துள்ள நெல் மணிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com