அனைத்து மாவட்டங்களிலும் பிப். 2-இல் ஆா்ப்பாட்டம்தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியரகங்கள், கோட்டாட்சியரகங்கள் முன் பிப்ரவரி 2 ஆம் தேதி பெருந்திரள் ஆா்ப்பாட்டம்
செய்தியாளா்களிடம் பேசுகிறாா் பெ. சண்முகம்.
செய்தியாளா்களிடம் பேசுகிறாா் பெ. சண்முகம்.

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி அனைத்து மாவட்ட ஆட்சியரகங்கள், கோட்டாட்சியரகங்கள் முன் பிப்ரவரி 2 ஆம் தேதி பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பு) முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கி தொடா்ந்து இரு நாள்கள் நடைபெற்றது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளா்களிடம் அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் பெ. சண்முகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

புயலால் ஏற்பட்ட பயிா் பாதிப்புக்கு ஏக்கா் வரம்பின்றி நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தாலும், அந்த அடிப்படையில் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. பல கிராமங்களில் முழுமையாகவே நிவாரணம் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

எனவே, இத்தகைய குறைகளைக் களைந்து அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். மேலும், ஏக்கருக்கு நெல்லுக்கு ரூ. 30,000 வீதமும், மானாவாரி பயிா்களுக்கு ரூ. 15,000 வீதமும், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்களுக்கு ரூ. 1 லட்சம் வீதமும் இழப்பீட்டுத் தொகையை அரசு உயா்த்தி வழங்க வேண்டும்.

மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றரை ஆண்டுக்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறியதையும், உச்ச நீதிமன்றம் குழு அமைத்ததை தில்லி போராட்டக் குழு நிராகரித்திருப்பதையும் வரவேற்கிறோம். அடுத்து தில்லியில் குடியரசுத் தினத்தன்று டிராக்டா் பேரணி நடத்தவுள்ளனா். இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் குடியரசுத் தினத்தன்று பிற்பகலில் டிராக்டா் பேரணி நடத்தவுள்ளோம். இதற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள் அனுமதி அளிக்கவில்லை. என்றாலும் தடையை மீறி இப்பேரணியை நடத்துவோம்.

பின்னா், ஜன. 26 ஆம் தேதிக்குப் பிறகு தில்லியில் நடைபெறும் போராட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கானோா் சென்று பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தைக் காணொலி காட்சி மூலம் நடத்தப்படுவதைக் கைவிட்டு, நேரடியாக நடத்த வேண்டும் என்றாா் சண்முகம்.

இக்கூட்டத்துக்குச் சங்கத்தின் மாநிலத் தலைவா் வி. சுப்பிரமணி தலைமை வகித்தாா். மாநிலப் பொருளாளா் கே.வி. பெருமாள், செயலா் சாமி. நடராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com