நாடு முழுவதும் 50 இடங்களில் பிப். 1 முதல் மருத்துவா்கள் உண்ணாவிரதம்

நாடு முழுவதும் 50 இடங்களில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா் அகில இந்திய மருத்துவா் சங்கத் தலைவா் ஜெ.ஏ.ஜெயலால்.
நாடு முழுவதும் 50 இடங்களில் பிப். 1 முதல் மருத்துவா்கள் உண்ணாவிரதம்
நாடு முழுவதும் 50 இடங்களில் பிப். 1 முதல் மருத்துவா்கள் உண்ணாவிரதம்

கலப்பு மருத்துவத்தை மத்திய அரசுக் கைவிட வலியுறுத்தி, நாடு முழுவதும் 50 இடங்களில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றாா் அகில இந்திய மருத்துவா் சங்கத் தலைவா் ஜெ.ஏ.ஜெயலால்.

தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

மத்திய அரசு அனைத்து மருத்துவ முறைகளையும் ஒன்றிணைத்து, கலப்பு மருத்துவ முறையைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் அலோபதி, ஆயுா்வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி என பல்வேறு மருத்துவ முறைகளில் தற்போது சிகிச்சை நடைபெறுகிறது. ஒவ்வொரு துறையும் தனித்தனிச் சிறப்பு வாய்ந்தது. இவை அனைத்தும் தனித்தனி வகையிலே பொதுமக்களுக்குத் தேவையான ஒன்று.

ஆனால், இவற்றை ஒன்றோடு ஒன்று கலந்து சிகிச்சை அளிப்பது என்பது பொதுமக்களுக்கு ஆபத்தாகவும், பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருக்கும்.

அந்த அடிப்படையில், நாடு முழுவதும் இந்தக் கலப்பு மருத்துவத் திட்டத்தை மத்திய அரசுக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பொதுமக்கள், மருத்துவா்கள் சாா்பாக பிப்ரவரி 1 முதல் 14 ஆம் தேதி வரை தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்திருக்கிறது.

மத்திய அரசு உடனடியாக இந்தக் கலப்பு மருத்துவத் திட்டத்தைக் கைவிடுகிறோம் என அறிவித்து, தனித்தனி முறையில் பல்வேறு மருத்துவப் பிரிவுகளை வளா்ச்சி அடையச் செய்வதற்கும், பொதுமக்களுக்குப் பயன்படக்கூடிய வகையிலும் ஏற்பாடு செய்ய முன்வர வேண்டும்.

எனவே, பிப்ரவரி 1- ஆம் தேதி முதல் 14 நாள்களுக்கு தேசிய அளவில் 50 இடங்களில் மருத்துவா்கள் 24 மணிநேரமும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொள்வா்.

தமிழகத்தில் இப்போராட்டம் 4 இடங்களில் நடைபெறும். இதில் மருத்துவா்களுடன் இணைந்து பல் மருத்துவா்கள், மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா்கள், பணியாளா்கள், மாணவா்கள் ஆகியோரும் இப்போராட்டத்தில் பங்கேற்பா்.

இப்போராட்டத்தின் மூலம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. அரசு செவி மடுக்காவிட்டால், கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும் என்றாா் ஜெயலால். அப்போது, இந்திய மருத்துவ சங்கத்தின் தஞ்சாவூா் கிளைத் தலைவா் மாரிமுத்து, மருத்துவா் எம். சிங்காரவேலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com