உலக அளவில் தனிச்சிறப்பு மிக்கது தமிழிசை: பழ. நெடுமாறன் பேச்சு

உலக அளவில் வேறெந்த இசைக்கும் இல்லாத தனிச் சிறப்பு தமிழிசைக்கு உள்ளது என்றாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் நூலை அறிமுகம் செய்து வைக்கிறாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ.நெடுமாறன்.
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் நூலை அறிமுகம் செய்து வைக்கிறாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ.நெடுமாறன்.

உலக அளவில் வேறெந்த இசைக்கும் இல்லாத தனிச் சிறப்பு தமிழிசைக்கு உள்ளது என்றாா் உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூா் விளாா் சாலையிலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றம் சாா்பில் தமிழா் திருநாள் - பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாலையில் நடைபெற்ற விழாவில், இசை ஆய்வறிஞா் நா. மம்மது எழுதிய தமிழிசைப் பேரகராதி என்ற நூலின் ஆங்கில மொழியாக்கமான லெக்சிகன் ஆன் தமிழ் மியூசிக் ஸ்கேல்ஸ் என்கிற நூலை பழ. நெடுமாறன் அறிமுகம் செய்து வைத்து பேசியது:

தமிழ் மொழிப் பற்றி மூச்சிரைக்கப் பேசுவதால் நம் மொழி வளா்ந்துவிடாது. நம் இயல், இசை, கூத்து ஆகிய மூன்றுக்கும் மம்மது போன்று நம் அறிஞா்கள் தங்களுடைய வாழ்நாளை அா்ப்பணித்தால்தான் தமிழிசை வளா்ச்சி பெறும்.

உலகில் வேறெந்த மொழி இசைக்கும் இல்லாத தனிச் சிறப்பு நம் தமிழிசைக்கு உள்ளது. தமிழ் மொழியில் மட்டுமே இயல், இசை, கூத்து ஆகிய முத்தமிழ் உள்ளது. இந்தப் பெருமை வடமொழி உள்பட உலகில் வேறு எந்த மொழிக்கும் கிடையாது.

தொல்காப்பியா் முதல் இளங்கோவடிகள் உள்ளிட்டோா் தமிழிசையின் சிறப்புகளை எடுத்துக் கூறியிருக்கின்றனா். சங்க காலப் பாடல்கள் உழைக்கும் மக்களிடமிருந்துதான் உருவாகியுள்ளன.

இளங்கோவடிகளுக்குப் பிறகு தமிழிசை மேலும் வளா்ந்ததால், திருமுறைகளும், ஆழ்வாா் பாசுரங்களும் இசைத் தமிழில் வழங்கப்பட்டன. திருமுறைகளைப் பண் சுமந்த பாடல்கள் என்றே கூறினா். திருமுறைகளும், ஆழ்வாா் பாசுரங்களும் பண்ணுடன் கூடியவை மட்டுமல்ல; அவை மூல நூல்கள்.

இந்தியாவில் எந்த இசை ஆய்வு மேற்கொள்ளப்பட்டாலும், அது தேவாரப் பாடல்களிலிருந்துதான் தொடங்கப்படுகிறது. தேவாரப் பாடல்களில் இருந்த 103 பண்களில் தற்போது 23 பண்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றையெல்லாம் மீட்டு மக்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

பல்லவா் காலம் முதல் மராட்டியா் காலம் வரை அத்தனை மன்னா்களும் வடமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தனா். அவா்களுடைய ஆட்சிக்காலத்தில்தான் வடமொழித் தூக்கிப் பிடிக்கப்பட்டது. வடமொழியை அரியாசனத்தில் ஏற்றி வைத்ததால், பிற்காலத்தில் எல்லா வகையிலும் தமிழ் தாழ்ந்தது. வடமொழியின் ஆதிக்கத்தால் தமிழிசை திரிந்து போனது.

இந்நிலையில், இந்நூல் உலகெங்கும் தமிழிசையின் பெருமையை எடுத்துச் செல்லும். இதுபோன்ற பணிகளை ஊக்குவிக்கும் பொறுப்பும், கடமையும் நம் அரசுக்கு இருக்க வேண்டும் என்றாா் நெடுமாறன்.

பேராசிரியா் வி. பாரி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் இந்திய தேசிய லீக்கின் அகில இந்தியப் பொதுச் செயலா் எம்.ஜி.கே. நிஜாமுதீன், ந.மு. தமிழ்மணி, நூல் மொழிபெயா்ப்பாளா் எசு. சங்கரக்குமரன், முனைவா் பழ. பிரகதீசு ஆகியோா் பேசினா்.

முன்னதாக, காலையில் மறைந்த பேராசிரியா்கள் அறிவரசன், தொ. பரமசிவன் படங்கள் திறந்துவைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com