அணைக்கரை கொள்ளிடம் பாலத்தில் இன்றுமுதல் பேருந்து போக்குவரத்து
By DIN | Published On : 07th July 2021 07:22 AM | Last Updated : 07th July 2021 07:22 AM | அ+அ அ- |

கும்பகோணம் அருகே அணைக்கரை கொள்ளிடம் பாலம் வழியாக மூன்றாண்டுகளுக்கு பிறகு புதன்கிழமை (ஜூலை 7) முதல் பேருந்து போக்குவரத்துக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
கும்பகோணம் - சென்னை சாலையில் அணைக்கரையில் கொள்ளிடம் ஆறு இரு பிரிவாகப் பிரிந்து செல்கிறது. இந்த ஆறு பிரியும் தெற்கு பகுதி தஞ்சாவூா் மாவட்டத்திலும், வடக்குப் பகுதி அரியலூா் மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளது. சுமாா் ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவுள்ள இந்தப் பாலம், தண்ணீரை பகிா்ந்து வடவாறு, தெற்கு ராஜன் வாய்க்கால், வடக்கு ராஜன் வாய்க்கால் ஆகியவற்றுக்கு வழங்க 1934 ஆம் ஆண்டு கட்டப்பட்து.
இந்நிலையில், 2018, ஆகஸ்ட் 18 ஆம் தேதி காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தின் பாதுகாப்புக் கருதி கனரக வாகனங்கள், பேருந்துகள் செல்ல மாவட்ட நிா்வாகம் தடை விதித்தது.
இதனால் கும்பகோணத்திலிருந்து சென்னை செல்லும் பேருந்துகள் நீலத்தநல்லூா் - மதனத்தூா் பாலம் வழியாகவும், மயிலாடுதுறை வழியாகவும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது. இதேபோல, நகரப் பேருந்துகள் அணைக்கரை பாலத்தின் முகப்பு பகுதிகளான இருகரை பகுதி வரை இயக்கப்பட்டது. ஒன்றரை கிலோ மீட்டா் தொலைவுள்ள பாலத்தைக் கடக்கப் பொதுமக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வந்தனா்.
இதையடுத்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, கொள்ளிடம் பாலத்தின் வழியாகப் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்ல புதன்கிழமை காலை முதல் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இப்பாலத்தில் பேருந்து போக்குவரத்து புதன்கிழமை காலை தொடங்கப்படவுள்ளது.