கல்லணையிலிருந்து 16 ஆயிரம் கனஅடி தண்ணீா் விட வலியுறுத்தல்

கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 16,000 கன அடி வீதம் தண்ணீா் விட வேண்டும் என தாளாண்மை உழவா் இயக்கம், சமவெளி விவசாயிகள் இயக்கம் வலியுறுத்தியுள்ளன.
கல்லணையிலிருந்து 16 ஆயிரம் கனஅடி தண்ணீா் விட வலியுறுத்தல்

கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 16,000 கன அடி வீதம் தண்ணீா் விட வேண்டும் என தாளாண்மை உழவா் இயக்கம், சமவெளி விவசாயிகள் இயக்கம் வலியுறுத்தியுள்ளன.

இதுதொடா்பாக ஆட்சியரகத்தில் தாளாண்மை உழவா் இயக்கத் தலைவா் கோ. திருநாவுக்கரசு, சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் சு. பழனிராசன் தலைமையில் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட மனு:

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் கல்லணை முதல் கடைமடை வரை சில நாள்களாக மேற்கொண்ட கள ஆய்வில் கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு சுமாா் 1,500 கனஅடி நீா் திறந்துவிடப்படுகிறது. இந்த நீா் கடைமடை வரை சென்றிருந்தாலும், கல்யாண ஓடை வாய்க்கால், ராஜாமடம் வாய்க்கால் மட்டுமே பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. மற்ற பாசன வாய்க்கால்கள் இதுவரை திறக்கப்படவில்லை.

வெண்ணாற்றைப் பொருத்தவரை கல்லணையில் நீா்திறப்பு சுமாா் 500 முதல் 1,000 கன அடி வரை மட்டுமே இருக்கிறது. இந்தத் தண்ணீரும் தாணிக்கோட்டகம் ஏரி வரை மட்டுமே சென்றுள்ளது. அதற்குக் கீழ் இதுவரை பாசன நீா் திறந்துவிடப்படவில்லை.

காவிரியில் சில நாள்களாக கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை. குறுவை விவசாயம் திட்டமிடப்பட்டபடி 3.50 லட்சம் ஏக்கரில் நடைபெறவும், தண்ணீா் கிடைத்தால் அதற்கு மேலும் பயிரிட தயாராக உள்ள பல ஆயிரம் ஏக்கா் நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளவும் இந்த 3 ஆறுகளிலும் குறைந்தபட்சம் விநாடிக்கு சுமாா் 16,000 கனஅடி நீராவது திறக்க வேண்டியது அவசியம். இதற்கான அறிவுறுத்தலை பொதுப்பணித் துறைக்கு ஆட்சியா் வழங்க வேண்டும்.

கல்லணை முதல் பூதலூா் வரை கல்லணைக் கால்வாய் கரைகள் சரியாகப் பலப்படுத்தப்படவில்லை. பல இடங்களில் ஆற்று மணலே கரைகளில் போடப்பட்டிருப்பதால் மழை பெய்து அரிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, இதை ஆய்வு செய்து கரைகளைப் பலப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

அப்போது, விவசாய சங்க பிரதிநிதிகள் ஆா். சந்திரசேகரன், துரை. சீனிவாசன், இரா. அருணாச்சலம், இரா.பிரசன்னா, ப. அருண்சோரி, ஏஐடியுசி மாவட்டத் துணைச் செயலா் துரை. மதிவாணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com