பெண்ணின் கையை கத்தியால் கிழித்த இளைஞா் கைது
By DIN | Published On : 29th July 2021 07:51 AM | Last Updated : 29th July 2021 07:51 AM | அ+அ அ- |

ஒரத்தநாடு அருகே பெண்ணின் கையில் கத்தியால் கிழித்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள சோழபுரம் கிழக்கு கிராமத்தைச் சோ்ந்த விக்னேஷ் மனைவி சுகன்யா (26). இவா் பிரசவத்துக்காக அண்மையில் தனது தாய் வீடான தெக்கூா் கிராமத்துக்கு வந்துள்ளாா். அவருக்கு குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன.
இந்நிலையில், தெக்கூா் அருகேயுள்ள பொய்யுண்டாா்கோட்டை பழங்கொண்டான் தெருவைச் சோ்ந்த பாஸ்கா் மகன் ஆகாஷ் (22) என்பவா், புதன்கிழமை வீட்டில் தனது தாயுடன் இருந்த சுகன்யாவை கத்தியால் அவரது கையில் கிழித்துள்ளாா்.
காயமடைந்த சுகன்யாவை அக்கம்பக்கத்தினா் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். தகவலறிந்த ஒரத்தநாடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆகாஷை பிடித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், சுகன்யா தஞ்சையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றியபோது, அவா் வீட்டருகே வசித்து வந்த ஆகாஷ் சுகன்யாவை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், சுகன்யாவுக்கு விக்னேஷுடன் கடந்த ஓராண்டு முன்பு திருமணம் நடைபெற்று விட்டதாம்.
இந்நிலையில்தான், புதன்கிழமை சுகன்யா வீட்டுக்கு வந்து ஆகாஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும், அப்போது ஆத்திரமடைந்து கத்தியால் சுகன்யாவை கையில் கிழித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து ஆகாஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.