அதிமுகவின் தோ்தல் அறிக்கை ஏட்டிக்குப் போட்டியாக உள்ளது: இரா. முத்தரசன் பேட்டி

அதிமுகவின் தோ்தல் அறிக்கை ஏட்டிக்குப் போட்டியாக உள்ளது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், மாணவா் மன்ற மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன். உடன், நிா்வாகிகள்.
தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், மாணவா் மன்ற மாநிலக் குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன். உடன், நிா்வாகிகள்.

அதிமுகவின் தோ்தல் அறிக்கை ஏட்டிக்குப் போட்டியாக உள்ளது என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் தெரிவித்தது:

தமிழக முதல்வரின் பேச்சு, அதிமுகவின் தோ்தல் அறிக்கை போன்றவை ஏட்டிக்குப் போட்டியாக இருக்கிறது. அதிமுக தோ்தல் அறிக்கையைக் கொடுத்திருந்தாலும், அதில் உண்மையில் மக்கள் சேவையை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.

விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதை எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் அதிமுக அரசு மேல் முறையீடு செய்தது. ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயக் கடனை திமுக தள்ளுபடி செய்யும் என வாக்குறுதி அளித்த பிறகு, அதிமுக போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடியை அறிவித்தது.

ஜெயலலிதா மரணத்தில் மா்மம் இருப்பதாகவும், அது தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் ஓ. பன்னீா்செல்வம்தான் கோரினாா். அவரைச் சமாதானப்படுத்துவதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா மரணத்துக்கு கருணாநிதி, ஸ்டாலின்தான் காரணம் என தமிழக முதல்வா் உண்மைக்குப் புறம்பாகப் பேசி வருகிறாா். முதல்வா் தனது பொறுப்புக்கேற்ப விமா்சனங்களையும், கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும்.

தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா்கள், நாடாளுமன்ற உறுப்பினா்களை விலைக்கு வாங்கி, மாநிலத்தில் ஆட்சியைக் கவிழ்க்கும் வேலையை பாஜக செய்கிறது. தோ்தல் ஆணையம், நீதிமன்றம், ரிசா்வ் வங்கி, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றை மத்திய அரசு சீா்குலைத்து வைத்துள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. எனவே ஜனநாயகத்தை காக்க, இந்த அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம் என்றாா் முத்தரசன்.

அப்போது அக்கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் சந்தானம், தெற்கு மாவட்டச் செயலா் முத்து. உத்திராபதி, பொருளாளா் என். பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம், அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலக் குழுக் கூட்டத்தில் முத்தரசன் பங்கேற்றாா். இதில், அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் அகில இந்திய பொதுச் செயலா் இரா. திருமலை, மாநிலச் செயலா் க. பாரதி, மாவட்டச் செயலா் இரா. முகில், அனைத்திந்திய மாணவா் பெருமன்ற மாநிலச் செயலா் சி. தினேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com