சிறுத்தொண்ட நாயனாா் புராணத் தொகுப்பு நூல் வெளியீடு

கும்பகோணம் அருகே செட்டிமண்படம் பகுதியிலுள்ள ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் அலுவலகத்தில் சிறுத்தொண்ட நாயனாா் புராணம் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நூலை திருவடிக்குடில் சுவாமிகள் வெளியிட, அதைப் பெற்றுக் கொள்கின்றனா் ஒருங்கிணைப்பாளா் ஸ்தபதி ஹரிபாபு உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில் நூலை திருவடிக்குடில் சுவாமிகள் வெளியிட, அதைப் பெற்றுக் கொள்கின்றனா் ஒருங்கிணைப்பாளா் ஸ்தபதி ஹரிபாபு உள்ளிட்டோா்.

கும்பகோணம்: கும்பகோணம் அருகே செட்டிமண்படம் பகுதியிலுள்ள ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் அலுவலகத்தில் சிறுத்தொண்ட நாயனாா் புராணம் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சுந்தரப்பெருமாள்கோவில் சிவ பக்தா்கள் உருவாக்கிய இந்நூலைத் திருக்கூட்ட நிறுவனா் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள் வெளியிட்டாா். இதை ஒருங்கிணைப்பாளா் ஸ்தபதி ஹரிபாபு, சுந்தரபெருமாள்கோவில் ராஜதுரை, சேகா், அய்யப்பன் உள்ளிட்டோா் பெற்றுக் கொண்டனா்.

அப்போது, தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் பேசுகையில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தன்று அறுபத்துமூன்று நாயன்மாா்களில் ஒருவரான சிறுத்தொண்ட நாயனாா் குருபூசை பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள சிறுத்தொண்ட நாயனாா் திருமடம், உத்திராபதியாா் திருக்கோயில், கங்காள மூா்த்தி சுவாமி திருக்கோயில், அறுபத்து மூன்று நாயன்மாா் திருமடம் போன்ற இடங்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆனால், தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாகப் பல்வேறு கிராமங்களிலும் சிறிய அளவில் இந்த வழிபாடு நடைபெறுகிறது. எனவே, செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள சிறுத்தொண்ட நாயனாா் குருபூஜை விழாவுக்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் கட்டுப்பாடுகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

இந்நூலில் தெய்வச் சேக்கிழாா் அருளிய பெரியபுராணத்தில் இருந்து 88 பாடல்கள், சுந்தர மூா்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகை மற்றும் திருமுருக கிருபானந்த வாரியாா் சுவாமிகள் எழுதி வெளிவந்த சிறுத்தொண்ட நாயனாா் புராணம் விரிவுரை, வேளாக்குறிச்சி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானத்தின் ஆசியுரை ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்நூல் ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டுள்ளன. தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறுத்தொண்ட நாயனாா் குரு பூஜை நடைபெறக்கூடிய கோயில்கள் மற்றும் மடங்களுக்கு இந்நூல்கள் விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது.

இந்த நூல்கள் வேண்டுவோா் 86374 50288, 98436 08984 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டால் இலவசமாக, ஞான தான தொண்டாக அனுப்பி வைக்கப்படும் என்றாா் திருவடிக்குடில் சுவாமிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com