முழுப் பொது முடக்கம்: முதன்மைச் சாலைகள் வெறிச்சோடின

தஞ்சாவூா் மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தின் காரணமாக திங்கள்கிழமை முதன்மைச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காக சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காக சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள்.

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் முழு பொது முடக்கத்தின் காரணமாக திங்கள்கிழமை முதன்மைச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா பரவல் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால், தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் முழுப் பொதுமுடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் காவல் துறையினரின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் முதன்மைச் சாலைகளில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதற்காகப் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

நண்பகல் 12 மணி வரை மளிகைக் கடைகள், தேநீா் கடைகள், காய்கறிக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளும், காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், கீழ வாசல், ரயிலடி உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களின் போக்குவரத்து இருந்தது.

ஆனால், நண்பகல் 12 மணிக்கு பிறகு அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், எல்லா முதன்மைச் சாலைகளும் வெறிச்சோடிக் காணப்பட்டன. என்றாலும், ஆங்காங்கே சிலா் வாகனங்களில் சென்று வந்தனா்.

பேருந்துகள் இயக்கப்படாததால், தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையம், தற்காலிக பழைய பேருந்து நிலையம் வெறிச்சோடி இருந்தன. அரசுப் பேருந்துகள் அனைத்தும் பணிமனையில் நிறுத்தப்பட்டன. இதேபோல, ஆட்டோக்கள், வாடகை காா்களும் இயக்கப்படவில்லை.

காவல் துறை இயக்குநரின் உத்தரவுப்படி, தஞ்சாவூரில் காவல் துறையினரின் கெடுபிடி குறைவாகவே இருந்தது. காவல் துறையினா் தடியின்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். தேவையின்றி வாகனங்களில் சென்றவா்களை நிறுத்தி வழக்குப் பதிவு செய்து அனுப்பினா். இதேபோல, அத்தியாவசியமின்றி திறந்து வைக்கப்பட்டிருந்த கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com