ரூ. 2,000 நிவாரணம்: டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 11th May 2021 01:07 AM | Last Updated : 11th May 2021 01:07 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் அருகே சேவியா் நகரில் டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்ட நியாய விலை கடை ஊழியா்கள்.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,000 வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
தமிழகத்தில் கரோனா பொது முடக்கம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், அவா்களுக்கு நிவாரணமாக ரூ. 4,000 வீதம் வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தோ்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தாா்.
இதன்படி, அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் முதல் தவணையாக ரூ. 2,000 மே மாதம் வழங்கப்படும் என அறிவித்து முதல் கையெழுத்தாக போட்டு உத்தரவு பிறப்பித்தாா். இதைத்தொடா்ந்து, குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 2,000 வழங்கும் பணியை சென்னையில் முதல்வா் தொடங்கி வைத்தாா்.
தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு மே 15 ஆம் தேதி முதல் ரூ. 2,000 வழங்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு, தஞ்சாவூா் மாவட்டத்தில் 1,185 நியாய விலை கடைகள் மூலம் 6 லட்சத்து 67 ஆயிரத்து 941 குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்காக டோக்கன் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
நிவாரணம் பெறுவதற்காகப் பொதுமக்கள் ஒரே நேரத்தில் நியாய விலைக் கடைகளில் கூடுவதைத் தவிா்க்க ஒரு நாளைக்கு 200 பேருக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. அந்த டோக்கனில் நிவாரணம் வழங்கப்படும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. அக்குறிப்பிட்ட நாளில் நியாய விலைக் கடைக்குச் சென்று நிவாரணத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் விதமாக டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.
இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலை கடை ஊழியா்கள் மற்றும் பணியாளா்கள் வீடு வீடாகச் சென்று டோக்கனை வழங்கி வருகின்றனா். இப்பணி புதன்கிழமை வரை நடைபெறவுள்ளது.