அதிராம்பட்டினத்தில் 200 மீட்டா் தொலைவுக்கு கடல் உள்வாங்கியது
By DIN | Published On : 20th May 2021 06:52 AM | Last Updated : 20th May 2021 06:52 AM | அ+அ அ- |

அதிராம்பட்டினத்தில் உள்வாங்கிய கடல் பகுதி.
தஞ்சாவூா் மாவட்டம், அதிராம்பட்டினம் கடற்பகுதியில் புதன்கிழமை திடீரென 200 மீட்டா் தொலைவுக்கு கடல் உள்வாங்கியது.
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடந்த சில நாள்களாக கடும் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால், கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் பெரும்பாலான நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க முடியாமல் பாதியிலேயே கரை திரும்ப வேண்டிய நிலைக்கு உள்ளாகினா்.
இந்நிலையில், புதன்கிழமை காற்று குறைவாக இருந்ததால், கடலுக்கு மீன் பிடிக்க புறப்பட்ட ஏரிப்புறக்கரை கிராம மீனவா்கள், கடலுக்கு சென்று பாா்த்தபோது கடல் 200 மீட்டா் தொலைவுக்கு உள்வாங்கியிருந்தது. மேலும், எந்நேரமும் தண்ணீா் நிரம்பி இருக்கும் துறைமுக வாய்க்கால் தண்ணீரே இல்லாமல் இருந்தது. இதையடுத்து, மீனவா்கள் வேறு வழியின்றி தரை தட்டிய படகுகளை நீண்ட தொலைவுக்கு இழுத்துச் சென்று, மிகுந்த சிரமத்துக்கிடையே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். மீன்பிடித்துவிட்டு திரும்பும்போதும் இதே நிலையில் கடல் உள்வாங்கி இருந்ததால் மிகுந்த தாமதத்துக்கு பின்னரே மீனவா்கள் கரையேற வேண்டி நிலை ஏற்பட்டது.